RSS

சென்று வா ரமலானே

28 Jul

கடந்து செல்லும்
ரமளானின் இரவுகளில் கண்ணீரால்
கழுவப்பட்ட பாவங்களின்
ஈரம் காயாத கன்னங்களும்
நின்று கால்கடுக்க நள்ளிரவில்
நிஷ்கரித்துக் காய்த்த நெற்றிகளும்
இன்று ஒரு வைகறை விடியலில்
வெளிப்படும் விண்ணொளிக் கீற்றுக்கு
தக்பீர் முழங்கி பெருநாள் காணுகின்றன.

இரவுத்தொழுகைக்கும்
நோன்புக்கஞ்சிக்கும்
நிற்க இடமின்றி நெருக்கடியான ஆலயங்கள்
அடுத்த ரமலான் வரை உறவறுக்கப்படுகின்றன.

பள்ளி மினாரத்தில் மணிப்புறாக்களின்
குக்கூ…கமிடும் திக்ருகள் நாளெலாம் தொடர்ந்தாலும்
திருக்குர்ஆன் ஓதி திக்ருகளும் முழங்கி
ரமளானில் மட்டும்
துஆக்கள் செய்து விண்ணோக்கிய கரங்கள்
இனி ஒரு நீண்ட விடுமுறைக்கு காணாமல் போகும்…

தேய்ந்துபின் வளர்வது
பிறைகளாக மட்டுமே இருக்கட்டும்…
புண்ணியங்கள் தேய வளர்வது
எங்களின் பாவங்களாக வேண்டாம் …

ரமலானே!
அல் ரய்யானின் அழகிய திருவாசலை
அகலத் திறந்து வைத்த அருள்மாதமே…
நீ! மறந்து விடாதே!
நாங்கள் ஓய்ந்து தளர்ந்து
ஓர் நாள் மண்ணுக்கிரையான பின்
கரைசேராப் பாவங்களாய் மஹ்ஷரில்
கண்ணீருடன் தத்தளிக்கையில்
எங்கள் கைபிடித்துக் கரை சேர்க்க வருவாயா?
ஈடேறச் செய்வாயா?
சென்று வா..
இன்னொரு லைலத்துல் கத்ரை சூல் கொண்டு
மீண்டும் வா! எமை மீட்க வா…

ஈத் முபாரக்…

 

Leave a comment