RSS

நீ அடிச்சியா?

28 Jul

எம்புள்ளைய அடிச்சியா?
——————————————
27 ஆம் கிழமை என்றால் நோன்பு மாதத்தில் லைலத்துல் கதிர் இரவு எனும் ஒரு விசேச ராத்திரியாக முன்பெல்லாம் நம் ஊரில் பள்ளிகளில் சீரியல் லைட்கள் கட்டி எல்லா விளக்குகளும் பின்னிரவு வரை எரிய வைத்து ஒளிவெள்ளத்தில் நின்று இறை வணக்கத்தில் இரவைக் கழிப்பார்கள்.சாயாவெல்லாம் விளம்புவார்கள் ஒரு முறை எங்கள் பள்ளியான ஜாமியுல் அன்வாரில் பாயசமும் குடிச்சேன். அருள் நிரம்பிய பாயசமோ என்னவோ?
ஓரு எட்டு எட்டரைக்கெல்லாம் தொழுகைக்கென பள்ளிக்கு வரும் பெரியவர்களையும் மோதியாரையும் இமாமையும் முந்திக்கொண்டு சின்னப் பையன்கள் கூட்டமாக நின்று கூடிக் கூடி பள்ளியில் பரபரப்பை ஏற்றிக் கொண்டிருப்பார்கள். மோதியார் மசூது மச்சான் அல சின்னப் பெக்கல்லாம் கூட்டம் போடாதைங்கோ? அப்படிம்பார்.
இடையிடையே சட்டு சட்டென அடிக்கும் சத்தம் கேட்கும்,
பெசாம இரிங்கல! கண்களை விரித்து பயம்காட்டிய வண்ணம் பள்ளிவாசல் முழுக்க ஆவியமும் மல்யுத்தமும் பிஷ்கூ பிஷ்கூ டுபாங்கி (துப்பாக்கி) சத்தமுமாய் விளையாடி அலம்பலாக கிடக்கும்.
அப்ப பள்ளிவாசலில் சேட்டை பண்ணி அடி வாங்கிட்டு வீட்டில் போய் சொன்னா வீட்டிலையும் ரண்டு அடி விழும்,
களிவட்ட நாயி போற எடமெல்லாம் கைச் சடத்தம் பண்ணிக்கிட்டு அலைஞ்சா கண்டவண்ட்டயிலாம்அடிவாங்கித்தான் சாவனும்…
ஆனா இப்ப அப்படியில்லை, என் சேக்காளி ஒரு அஞ்சாறு வருசத்துக்கு முந்தி ஒரு பையனை தொழுகையில் பக்கத்தில் நின்று கொண்டு சிரிச்சு விளையாடினான்னு அடிக்கவும் அவன் அங்கனேயே தொழுகையை தூர விட்டுட்டு வீட்டைப் பார்க்க கிளம்பிட்டான், போகும் போது ஒரு விரல் நீட்டி எச்சரித்து சொல்லிட்டுத் தான் போனான்,
நீ என்ன அடிச்சிய்யா? ஒன்ன எங்க பெதாட்டு நல்லம்மாவ கூட்டுவந்து என்ன செய்றேம் பார்!
அடிச்சவரு அங்கேயே நொந்துட்டார், மீதியையும் குழப்பத்துடன் தொழுதுட்டு வாசலுக்கு வந்தா, அங்கே அவன் பெதாட்டு நல்லமாவுடன் வாசலில் நின்னுக்கிட்டு இவர் இல்ல, இவர் இல்லன்னு காட்டிக்கிட்டே வந்து,
இவர் தாம் மா ன்னு ஆளைப் புடிச்சு அங்கேயே நிறுத்த,
அடே! ஒன்ன சேட்ட பண்ணாதேன்னு சும்மா தான செல்லமா தட்டுனே ன்னு, நண்பர் எவ்ளோ சொல்லியும் அந்த பெதாட்டும்மா,
இங்கேரு நீ என் அருமப்புள்ள மேல வச்ச கைய முறிச்சா என்னா? ன்னு கேட்டுட்டு போக, எங்களுக்கு ஒரே சிரிப்பா போச்சு,
விடப்பா… நம்ம காலத்துலய்லாம், சொய்ய (காதை) பிடிச்சு தூக்கி வாசல்ல கொண்டு போயி எத்தி உட்டாலும் கேக்க நாதியிருக்காது..
இப்ப அபடியில்லை.

 

Leave a comment