RSS

உதிராத சருகுகள்…

10 Jun

oviyam

கருத்த குரங்கிருட்டின் ஒட்டுமொத்த மௌனத்தையும் செவிட்டில் அறைவது போல ஒரு குண்டு பல்பு எரிய, பாவு விரிச்சுக்கட்டி சட்டக் சட்டக் பெட்டக் என தாளந் தப்பாது கூதல் காற்று வீசும் அதிகாலை நேரத்திலும் காக்குளிக்குள் இறங்கி அடிச்சு நொறுக்கும் அவள்

ஆசி எனும் ஆசியா..

நெய்யும்போது அசைந்தாடும் பலவப்படியில் ஒட்டப்பட்டிருந்த உடைந்த ஒரு சில்லுக் கண்ணாடியில் தனது முகம் நோக்கினாள். வில்லில் கோர்த்த ஒரு அம்பை இழுத்துப் பிடித்து நேர் நிமிர்த்தியதைப் போல கிண்ணெனும் தேகம். காண்பவர் வெடுக்கென கண்களை திருப்பிவிட முடியாதபடிக்கு இதயத்துள் துளையிட்டு நுழைந்திடும் அவள் முகத்திலேயே ஒட்டாத இரண்டு மைவரியிட்ட முட்டைக்கண்கள்… அவள் அன்றைய இளவட்டங்களின் இதய ஏக்கங்களின் முக்கியக் குவியம்.

கழுத்தில் கருப்புக்கயிறு ஒன்றை மட்டுமே கட்டிய ஏழைக்குமரு அவளின் தாய் கட(ன்)த்துக்கு வாங்கிவரும் தேங்காய் எண்ணெயை நீவிநீவி, குப்பையாய் வளர்ந்து குலுங்கிக் காடாய்க்கிடங்கும் மினுங்கும் கூந்தல் அவளுக்கு.

அவள் அழகி.

காய்ப்பேறிய உள்ளங்கையில் சிக்கெனப்பற்றிய இழுபுரியைப் இழுக்கையில் ஆடும் பலவைப்படியில் அந்தக்கண்ணாடித் துண்டில் ஜன்னலை தாண்டியபடி தெருவில் நிற்கும் அவளது அவனின் பிம்பத்தை இனம் கண்டு கொண்டாள் சிலிர்த்தாள்…

விடியக் காத்திருந்த அவன் கையில் புல் ஒன்றை பாவு வாளிப்பதற்காக எடுத்துக்கொண்டு வழக்கம் போல அவளின் வாசலில் ஆவலோடு கூறு கட்டிவிட்டு யாரும் காணாதபடிக்கு எதிர்பார்ப்புடன் ஜன்னலை நோக்கினான்.

சாடை அறிந்து மென்மையாகத் திரும்பியவள் அவனைப் பார்க்க எண்ணினாலும் எதிர்கொள்ளத தைரியமின்றி அவன் முகம் பார்க்க இயலாமலேயே காதலைச் சிந்தியபடி மீள் திரும்பினாள்…

பிறவிப்பலன் அடைந்தாற் போல அண்ணன் மெல்ல ராகம் கூட்டிப் பாடி வயிற்றை எக்கி வாளிக்க தொடங்கினார்.

ஓரிடம் பார்த்த விழி வேறிடம் பார்ப்பதில்லை

உன்னிடம் வந்த மனம் என்னிடம் சேரவில்லை….

எம்ஜியார் ரசிகரான அவரது நெற்றியில் விழுந்து புரண்ட குருவிக்கூடு கிராப்புச்சேக்கு வியர்வயில் நனைந்தபடி, ஈரமான கரணை கரணையான தோள்கள் பளபளப்பாக அவரது முன்டாப்பனியனில் எஞ்சியபடிக் காட்சியளிக்கையில் ஒரு திரையின் ஆதர்சக் கதா நாயகனையொத்த ஆணழகனாக அவரை அவளுக்குக் காட்டியது.

ஒரு வைகறையில் வசந்தம் குலுங்கும் வாலிபஇதயங்கள் ஒற்றை ஜன்னலை நடுவிலாக்கி கண்களால் பருகிக்கொண்டு ஆடிய மௌனமான காதல் விளையாட்டில், சாட்களில்லாமல் பெரும்பாலான பொழுதுகளின் புலர்ச்சிகளில் பூக்கள் இல்லாமலேயே அவள் வாசம் நிறைந்தாள்… புள்ளினங்கள் இல்லாமலேயே கானங்களை இசைத்தாள். இரவின் யாமங்களில் விடியலில் தோன்றப்போகும் அவனது வரவு எனும் வசந்ததுக்காக வாஞ்சையுடன் காத்துக்கிடந்தாள்…

போன ஒடுக்கத்துப் புதனில் வீடடங்க கிளம்பிய வெளிக்கிளம்பலில் ஏள்சனப்பாற (ஏழுசுனைப்பாறை)யில் தோழியின் மூலம் அவன் கேட்ட கேள்விக்கு அவள் சொன்ன பதில்

“புடிச்சிருக்கு”.

ஒற்றை வார்த்தை தான் ஆயினும் எத்தனை உணர்ச்சிகளை அவளுக்குள் நுழைத்திருந்தது.

பதில் சொன்ன அன்று அவளையே அவளுக்குப் பிடித்துப் போயிற்று. குடும்பம் குடும்பமாக வண்டி மாடுகள் கட்டி வந்தவர்கள் இருந்தாலும், கால்நடையாய் குடும்பம் மொத்தமும் சிரித்துப் பேசி குலுங்கி நடக்கையில் தாயமாடித் தாயமாடி தன்னை துரத்திக்கொண்டு அவன் வருவதை அவள் எண்ணி எண்ணி இதயம் பூரித்துப்போவாள்.

வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக அகாலமாய்க் கிடந்த புறத்தோடத்தில் ஓரமாய் பூத்துக்கிடந்த ஒன்றிரண்டு பிச்சிப்பூக்களை அள்ளி உள்ளங்கையில் வைத்துக் கொண்டாள்…

விடாது துரத்திய அவர்தம் களவொழுக்கம் தினமும் நல்ல தண்ணி கிணற்றுக்கரையில் அளப்பம் பேசியதாகவும், நடந்து வல்லத்துக்கு கிளம்பி சோடியாக பேசிக்கொண்டே கணவன் மனைவிபோல பாவனை செய்தபடி செல்லம் கொஞ்சிக் கினுன்கினாலும்,

சட்டென முடிந்துபோகும்படி…..

தோழிப்பெண்ணின் திருமணத்தில் இரவொன்றில், தூங்காவிழிகளுடன் தாங்கா சோகத்துடன் மிகக் குறுகிய சந்திப்பில்,

அவனிடம் கண்ணீர் நனைந்த வார்த்தைகளில் சொன்னால்.. எங்கூட்டுல ஒங்களுக்கு என்னைக் கெட்டித்தர யாருக்கும் இஷ்டமில்ல, நான் ஒரு வாயில்லாப்பூச்சி.. என்ன செய்யனுமின்னு எனக்கு ஒண்ணுந் தெரியல.. என்னால என்ன செய்யமுடியும்?

அங்கே அவனும் அழுதான்.

அந்த தாத்தவின் பூத்துக்குலுங்கிய வசந்தகாலம் நாங்கள் பார்த்திருக்க இலையுதிர்காலமாக மாறிய போது, உதிர்ந்த காய்ந்த சருகுகளுடன் அவனது முகம் காட்டிய பலவப்படிக் கண்ணாடியும் உதிர்ந்திருந்தது. அவளின் கல்புக்குள்ளிருந்த அந்த அண்ணனின் உருவம் மட்டும் உதிரவேயில்லை. பின்னர் அவள் தனக்கென எதையுமே நேசிக்க விரும்பவில்லை. தன்னை உட்பட…

அவங்க இன்னமும் சந்தோசமாத்தான் இருக்காங்க….

  • கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ். ஜூன் 10 2016
 

Leave a comment