RSS

Monthly Archives: July 2016

வெத்துப் பொழப்பு…

oviyam aasiriyan

ஆசிரியன் என்று அல்ல,  எந்த தொழிலை ஏற்றாலும் அதில் நமக்கென இருக்கும் தனித்துவ திறமையைப் பயன்படுத்தி, நாம் செய்யும் தொழிலில் ஆர்வமுடன் செம்மையாக செயயும் போது, மனம் மிகுந்த ஆனந்தம் அடைகிறது.

மிக முக்கியமாக நாம் செய்யும் வேலைக்கு நமக்கு வழங்கப் படும் ஊதியமே அதற்கான பயனாக கருதப்படும். அவ்விதம் நாம் பெற்ற சம்பாத்தியமே நாம் செலவிட்ட நம் திறமையின், ஆற்றலின் பயனாக கருதப்படும் என்பது உலக உண்மை.

ஆனால் அது சில நேரம் நமக்கு உறைப்பதேயில்லை.

தொன்னூற்று நான்காம்  ஆண்டு நம் பக்கத்து கிராமம் ஒன்றில் ஆசிரியனாக பணியாற்றத் துவங்கினாலும், சில ஆண்டுகளில் அங்கிருந்து மாறி வேறு ஒரு பள்ளிக்கு வந்து 2006 வரை, அதே வாத்தியார் வேலையை அடிமை வேஷம் போட்டபடி அலுப்பில்லாமல் செய்தேன்.

பதின்பருவ வயதுக்கு வந்த மாணாக்கர்கள் இருபாலரும், என்னை சூழ்ந்தபடி, எனது கற்பித்தலைக் கொண்டாடியம் போது, மது உண்ட வண்டாக “மதியின்றி” மயங்கிக் கிடந்தேன். பெரும்பாலான நேரம் பள்ளியில் மாணவர்களுடன் கழித்தேன். சில சமயம் எனக்கு சோறு போட்ட விவசாயத்தின் கூலியாள் கூட என்னைக்காண வேண்டி அன்றாடக் கணக்கு வழக்குக்கு, என் முன்னிரவு நேர பாடவேளைக்கு, வகுப்புக்கு வரும்படியாக கழியும் தொடர்ந்த நில்லாத பணி.

சில நேரம் மிக அலுப்பாக உணர்வேன்.

வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு வரும் நண்பர்கள் எதேச்சையாக கேட்பார்கள். என்னப்பா எவ்ளவு நாளைக்கு இப்டி சும்மா ஊர்ல கெடக்கப் போற? காத்துள்ள போதே தூத்திக்கிட வேண்டாமா? உன் இளமைக் காலத் திறமையை ஆற்றலை விழலுக்கு இரைச்ச நீராக வீணடித்து விடாதே. கவனிச்சுக்கப்பா! “சில சமயம் இவங்க ஏமாத்திருவாங்க”…

இல்லைப்பா நமக்கும் தகுதியிருக்கில்லடே? இத்தனை காலம் இருந்தாச்சு. அப்டியே சும்மா போட்டத போட்டபடி விட்டுட்டு போக முடியுமா? ன்னு மீண்டும் அதே அடிமை சங்கிலியை ஆசைப்பட்டு என் கழுத்தில் நானே பூட்டிக்கிட்டு,

மாணவர்களின் சார்! சார்! என வளைய வரும் சப்தத்தைக் காதில் கேட்டபடி, “எங்க சார்வா” என அழைக்கும் அந்த போதைக்கு ஒன்று இரண்டல்ல “பதிமூன்றாண்டுகள்” பைத்தியம் போல மயங்கி கிடந்தேன்..

பத்துப் பைசாககுப் பிரயோசனமில்லை. அன்று நான் பார்த்த அந்த வெத்துப் “பிழை’ப்பைத் தவிர்த்து வயித்துப்பிழைப்புக்காக, இன்று போல எங்காவது வந்து என் சக்தியை செலவழித்திருந்தால் அதன் பலனே வேறு மாதிரியாகியிருக்கும்.

காலமெல்லாம் நான் சம்பாத்தியம் செய்யும் அழகைக் காண வேண்டி எனக்காக் காத்திருந்த என் கண்மணியான வாப்பாவும் உம்மாவும் அவ்விதம் என்னைக் காண முடியாமல் போனது. ஒருகட்டத்தில் வஞ்சகத்தால் என் கழுத்தறுபட்டு வடிந்த சூடான செங்குருதியை மட்டுமே கண்டு வேதனையுடன் கண்ணீருடன் தன் கண்ணை மூடிக் கொண்டார்கள்.

ஆயினும் எனக்குத் தான் மனதுக்குள் என் சம்பாத்தியம் கொண்டு அவர்களை ஒருநாள் கூட தாங்க முடியவில்லையே என்ற தீராத வருத்தம் உண்டு.

ஆனால் இன்று அதே அடிமை சங்கிலிக் கணணிக்குள் இன்னமும் எததனையோ அப்பாவி இளைஞர்கள் இளம்பெண்களின் சிக்கி வீணாக காலவிரயம் செய்யும் காட்சியைக் காணும்போது வேதனையில் துடிக்கிறேன் என்னாலான ஆன உதவியாக, என் சுய வாழ்வில் நான் பட்ட அனுபவத்தை வெட்கமின்றி வெள்ளந்தியாக அவர்களுடன் பகிர்ந்து கொண்டேயாக வேண்டிய கட்டாயத்தை இங்கே உணர்கிறேன். பகிர்கிறேன்.

நாலு பேருக்கு மத்தியில் நானும் ஒரு ஆசிரியர் ன்னு சொல்லிக்கிட்டு நல்ல உடை உடுத்திக் கொண்டு நானும் பள்ளிக் கூடம் போறேன்னு ஆணும் தோளில் ஒரு ஹேன்ட் பேக்கும் போட்டு பெண்ணும் பள்ளிகளுக்கு, சுயநிதி எனும் அலங்கார வார்த்தையுடன் சொற்ப காசுக்கு வேலைக்கு போகலாம்.

ஆனால் உங்களுக்கென்று ஒரு குடும்பம் இருக்கும் போது, உங்களை உங்களின்  குடும்ப தேவையை பூர்த்தி செய்யவும் முதலில் தயாராக்கிக் கொள்ளுங்கள், உங்களின் அண்ணன் தம்பி மற்றும் உங்களுக்கு பாடுபட்டுப் போடும் உறவுகளின் சம்பாத்தியம் தவிர்த்து உங்களால் உங்களின் ச்மபளங் கொண்டு குடும்பம் நடத்தவியலாத ஒரு கணவனாக, நீங்கள் இருந்து என்ன பயன்?. இனியும் பெருமைக்கு மாரடிக்கும் அந்த பணியை தொலையுங்கள்… என் போன்றவர்களின் பதின்மூன்றாண்டு அடிமுட்டாளாகக் காலங்கழித்த அனுபவம் கண்டாவது உடனடியாக உஷாராய் விலகுங்கள்.

கிளம்புங்கள்!, பிரபஞ்சத்தில் பறவையைப் போல சிறகடித்துப் பரவுங்கள், இந்த இளமைப் பருவத்திலேயே எங்காவது வேலை தேடிப் போய் சேருங்கள் அல்லது சேர முயலுங்கள். கஷ்டமென்றால் என்னவென்று கண்டு அதனை அனுபவியுங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் வெளிக்கிளம்பி மனம் நிறைய ஏமாற்றங்களை சும்மந்து கொள்ளாதீர்கள். இந்த உலகம் உங்கள் ஒவ்வொருவருக்கும் உரிமையுடையது. என்னைப் பொருத்தமட்டில் எனக்கானது.. அதுபோல உங்களுக்கும் வெளியூரோ வெளிநாடோ வெளியேறிச் சென்றால் தான் நமக்கான உலகத்தை நாம் கண்டு உணரமுடியும்.

முன்பு நான் பணியாற்றிய காலத்தில் அப்போது காலியாகும் ஒரு பணியிடத்தில் சும்மா பணியாற்றிய எங்களை நிபந்தனைகளின்றி போடும் வாய்ப்பு இருந்தது. சிலரை போடவும் செய்தார்கள். ஆனால் இன்று அதற்கான ஆசிரிய தகுதித் தேர்வு எழுதி வென்றால் மட்டுமே அந்தப் பணி செய்ய நீங்கள் தகுதியடைய முடியும் எனும்போது, ஊரில் கிடந்து உங்களை நீங்களே அழிக்காதீர்கள்.

இதிலும் மிகப் பெரிய கொடுமை பக்கத்திலுள்ள பாலர் பள்ளியில் பிரிகேஜி எனும் மழலையருக்கு ஏபிசிடியை பாட்டோடு சொல்லிக் கொடுக்க  பட்டம் படித்த நம் பெண்மக்கள், இஞ்சினியர் படிச்சவங்க எல்லாம் போய் மெனக்கெடுறாங்க. ச்மபளமெல்லாம் கேட்டா சங்கு அறுந்து போகும். அதான். வேறென்ன கொடுப்பாங்க.

ஆனால் உங்களின் ஒஜீபனம் எனும் ரிஸ்கு அங்கு இல்லை. நீங்களே ஒரு கல்வி நிலையம், டியுசன் சென்டர், பாலர் பள்ளி போல நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள். முடிந்தால் வீட்டிலேயே குழந்தைகளுக்கு கிடைத்த நேரத்தில் பாடம் சொல்லிக் கொடுத்து கழியுங்கள்.

ஒரு பிசாத்துக் காசுக்காக பட்டமும் பெரிய பெரிய பட்டமெல்லாம் படிச்சிட்டுவந்து கண்டவனுக்கும் பயந்து சாகனுமா என்ன?