RSS

தூண்டிலுக்கான புழுவாய்

28 Jul

தூண்டிலில் கொழுவப்பட்ட துடிக்கும் புழுவாக…
———————————————————————————-
புத்தாடை அணிந்த விழா நாட்களில் ஒரு இனம் புரியா மகிழ்ச்சி தொற்றிக் கொள்வது போல, ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாட்களும் அடுத்த மாதத்தில் நாம் முன்னெடுக்கப் போகும் கணக்குக் கூட்டல்களை அதன் மனச்சோர்வை, அடுத்துவரும் மாத முதல்நாள் பெற்ற ஊதியம் மூலம் பெரும் மகிழ்ச்சியால் வென்றுவிடுவது ஒரு வழக்கமான உணர்வு வழி வாழ்வியல் உந்துதலே…
ஒரு காலம் இருந்தது. முத்திரை பதிக்கப்பட்ட பதிவுப் புத்தகத்தில் கையெழுத்திட்டு கைநிறைய சம்பாத்தியம் பெற்ற என் சக ஊழியர்கள் ஆடவரும் பெண்டிரும் சூழ நிற்கையில், அவர்களுக்குச் சமமாக அதற்கும் மேலாகவும் வேலை வாங்கப்பட்டும் சில நூறு ரூபாய் நோட்டுக்களே ஊதியமாக பெற முடிந்தது. அதுவும், பணியில் சேர நாங்கள் கொடுத்த கணிசமான வைப்புத் தொகை வங்கியில் போடப்பட்டு பரிவர்த்தனையில் பெற்ற மாதவட்டியில் பெற்ற தாள்களை எண்ணி இதை வைத்துக்கொள்! என ரத்தத்தை வியர்வையாய் சிந்தியதன் பலனாக அவமானங்களையும் வலியையும் ஊதியமாய்ப் பெற்றுக் கழிந்த நாட்களாகும்.
அந்த நாட்களை மறக்க முடியுமா?
எனது கற்பிக்கும் தாகம் கடலையும் தோற்கடிக்கும் அசாத்தியப் பொறுமையை என்னுள் விதைத்தது. ஏமாளியாக்கப்பட்ட என்னை அவர்களின் சதிவேலை அறியமுடியாமல் நீண்ட காலம் காத்திருக்கச் செய்தது, என் கண்களை என் கைகளைக் கொண்டே குத்த வைக்க உறவு வேடம் போட்டபடி அன்பொழுகப் பேசி என்னை நம்பவைத்து நாடகமாடி நாசம் விளைவித்தது. சில கடைக்கோடி இழி மனிதர்கள் வசம் என் கண்ணியம் நிறைந்த வாழ்க்கை ஒப்படைக்கப்பட்ட போது கழிவிரக்கமிக்க என் பொன்னான தருணங்கள் இன்னமும் நினைவில் வந்து சமரசம் செய்து கொள்ள முடியாமல் விழலுக்கு இறைத்த நீராய் என் உழைப்பை பிடுங்கியதை எண்ணி மாய்ந்து போகிறேன்.
ஒவ்வொரு முறையும் கஅபாவின் கில்லா எனும் அங்கியைப் பற்றியபடி என் ஒவ்வொரு பிரார்த்தனையும் மனதை சிதைத்த நிகழ்வுகளை மையம் கொண்டபடியும் மனதுக்கு ஆறுதல் கேட்டபடியும் அமைகின்றன.
மரித்துப் போன மௌன சாட்சிகளான என் உயிரான அன்பு வாப்பாவும் உம்மாவும் இறுதிக் காலங்களில் அவர்தம் கன்னம் நனையக் கண்ணீர் வடிக்க என்ன நம்பவைத்து ஏமாற்றிய உறவுகளும் ஒரு காரணம்.
கருணையாளன் காருண்யன் அல்லாஹ் என்னை மகிழ்வாகவே இன்று வைத்திருக்கிறான். என்னை பெற்றவர்கள் இந்த உலகில் என்னில் எதிர்பார்த்த இந்த நிலையை காணாமலே மரித்துப் போனார்களே எனும் சோகம் மட்டும் என்னை அடிக்கடி வேட்டையாடிக் கொல்லும் ஒரு நிஜம் ஆகும்.
அல்லாஹ் நீயே நிரந்தரமானவன்.
அல்லாஹுமஹ்பிர்லீ…

 

Leave a comment