RSS

ஒரு வருட ஹஜ்ஜுப் பயணம்.

28 Jul

zamzam
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் ஹஜ்ஜுக்குப் போகவேண்டி சுமார் நான்காண்டுகளாக சன்னஞ்சன்னமாக பொருள் திரட்டி, பேசிவைத்து திட்டமிட்டு ஹஜ் செய்ய சென்ற கொஞ்சம் பேரில் எங்களின் பள்ளிக்கூடத்து வாப்பா எனும் கலு. மு. அஹமது முஹைதீன் ஆலிம் சாஹிப் அவர்களும் ஒருவர்.
அந்தக் காலத்தில் ஹஜ்ஜை நினைக்கவே மனம் தளர்ந்து விடும்படியான திருப்தியான போக்குவரத்து இல்லாத நிலையில் கிடைக்கும் வாகனங்களிலும் போக்குவரத்தில்லாத இடங்களில் நடந்தும் பம்பாய் சென்று கப்பல் மூலமாக கடல் கடந்து ஜித்தா வரை வந்து பின்னர் கிடைக்கும் சில வாகனங்களையோ அல்லது சில இடங்களில் கால் நடையாகவோ கடந்து மக்கா மதீனா என தல்பியா முழங்கிக்கொண்டே திரிந்து எட்டொன்பது மாதங்களில் தனது ஹஜ்ஜுப் பயணத்தை முடித்துத் திரும்பினார்கள் என அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஜம்ஜம் தண்ணீர் கிணற்றின் கரையில் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தது மணிக்கணக்கில் செலவிட்டு ஒரு வாளி போட்டு இறைத்துக் கொடுத்த தண்ணீரை அவர்கள் ஆசை தீர குடித்தும் கொஞ்சம் கலயங்களில் சுமந்துமாய் தனது கடமையை நிறைவேற்றியதை சொல்லும் போது அதன் வலியும் ரணமும் தெரியவில்லை.. இன்னும் ஹஜ்ஜை முடித்துத் திரும்பிய அவர்கள் சில காலம் காய்ச்சலால் கஷ்டப்பட்டதாக சேர்த்தும் சொல்வார்கள்.
கால முன்னேற்றத்தில் கொதிக்கும் வெயிலில் கூட கால் பதித்தால் குளிர்ச்சியை ஊட்டும் பளிங்குத் தரையில் நாம் தவாப் செய்யும் நாம் கைக்கெட்டிய இடங்களில் எல்லாம் ஜம்ஜம் நீரை வினாடிகளில் எடுத்துப் பருகலாம். இன்று அனைத்து வகையிலும் நாம் பெரும் சுகங்களின் வழி நாமும் நமது வாரிசுகளும் கொடுத்து வைத்தவர்கள் தான். கஷ்டமே இல்லை.

 

Leave a comment