RSS

மிஸ்ரு தேசத்து இளவரசன்

28 Jul

ஆசை ஆசையாக என் மடியில் வந்து படுப்பான் என் மகன். எப்பொழுதும் அவனுக்கு நான் மிகவும் சொந்தமானவன் எனும் உணர்வை அனைவர் முன்னும் நிலைநாட்ட பிரியப்படுவான்… அவன் தலை முடியை கோதி விடும் போது கேட்பான் வாப்பா நீங்க ஒரு ஹதீஸ் சொல்லுங்க! போன முறை அப்படி அவன் கேட்க, அது கொஞ்சம் சிரமமான நேரம்,அப்பொழுது தான் திருநெல்வேலியில் இருந்து நாங்கள் வீட்டுக்கு வந்து கொஞ்சம் வயிற்றை நிரப்பி எப்படா கண்ணைப் பொத்தலாம் என ஏங்கிய நேரம்…
நான் அவனது ஆசையை மறுக்கவில்லை…
ஹஜ்ரத் பிலால் அவர்களை எத்தியோப்பியாவில் இருந்து அரபுலகிற்கு அடிமையாய் கொணர்ந்து அவருக்கு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமையை சொல்ல… கேட்டபடியே உணர்ச்சி வசப்பட்டவன்… கொஞ்சம் நேரத்தில் என்னருகில் வந்து படுத்துக் கொண்டான். என் அண்மையில் நெருங்கி என் நெஞ்சுக்குள் தன முகம் வைத்து நெருக்கிய சில வினாடிகளில் நான் கொஞ்சம் ஈரம் உணர்ந்தேன் அத்துடன் நிறுத்திவிட்டேன்.
அவன் அழுதான்..
மறு நாள் அதன் மீதியை நான் சொல்வேன் என எதிர்பார்த்திருப்பான். அவனாக கேட்க கொஞ்சம் வெட்கம்… பெரிய பையன் கண்ணீர் விட்டு வாப்பா முன் அழுதுவிட்டோம் என எண்ணியிருக்கலாம்… கொஞ்சம் கடினமான தருணமாக உணர்ந்திருக்கிறான்.
நானும் அதனை தொடராமல் வேறு ஒன்றை சொல்ல ஆரம்பித்தேன்..
முன்பு யூசுப் நபியின் கிஸ்ஸாவை வாப்பா என்னை தன அருகில் வைத்துக் கொண்டு சொன்ன அந்த விவரிப்பில் பதினாலாம் பக்கத்து நிலவை ஒத்த அழகுள்ள அந்த இறைத்தூதரை பாலகரை அந்த யூசுபை கிணற்றில் இறக்கிய நிகழ்வில் நான் ஓ என அழுத போது என்னுடன் அமர்ந்து கதைகேட்ட கடைக்கும்மா எனும் எங்களின் நல்லம்மா அழுகையை ஆற்றியபடி சொன்னார்கள்…
வாப்பா அழுவாத அந்த மகராசன் யூசுப் பிழைத்துவந்து அந்த ராஜ்ஜியத்தையே ஆண்டார் வாப்பா… ஆறுதலாக தலைய தடவி என் கண்ணீரை தன முந்தானை சீலையால் துடைத்தார்கள்..
அதன் தொடர்ச்சியை வாப்பா சொல்லும் முன்பாக கப்பலேறி மலேயா சென்ற பின் இரண்டாண்டுகள் காத்துக் கிடந்தேன்…
முற்றுப்பெறாத கதைகளின் அந்தக் கண்ணீர் காய்ந்தாலும் கல்புகளுக்குள் ஈரமாய் பிசுபிசுப்புடன் எப்பொழுதும்…

 

Leave a comment