RSS

படியளப்பவன் அவனல்லவா..

28 Jul

முஹ்ஸின்
———————
தன்வீர் நம்ம நாட்டுக்காரன் உத்தர் பிரதேச பய்யா, ஒடிசலான தேகம், அவன் இங்கே எங்களது நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலான தொழிற்சாலை பணிக்கு கைச்சாத்திட்டு வந்தமர்ந்து ஒரு ஆறு மாதம் ஆனபின், திறமையான அவனது கணக்காளர் பணியில் நிர்வாகத்தில் தன் திறமையை நிரூபித்தான்.
இவனது கண்காணிப்பில் மேல்மட்ட நிர்வாகத்தில் ஊழல் செய்ய வழியில்லாத நிலை ஏற்பட அவனது இருப்பே பழைய பெருச்சாளிகளின் கண்ணுக்குள் கிடந்த துரும்பாக உறுத்திக் கொண்டிருக்க, அவனை கிளப்ப சமயம் தேடியவர்களுக்கு மிகவும் கஷ்டப்படாமலேயே ஒரு வாய்ப்பு அமைந்து விட்டது.
அவனும் ஒரு நாள் காலையில் கூப்பிட்டனுப்பிய முதலாளியை நேரில் சந்திக்க தலைமை அலுவலகமான எங்களின் அலுவலகம் வந்து சேர்ந்தான். நானும் அவனை உள்ளே போய் பார் என சொல்லிவிட்டு என்ன நடந்தாலும் சபூர் செய் என கூறினேன்.. இரண்டு நாட்கள் நிம்மதியின்றித் தவித்த எதிர்காலத்தையே ஒரு கேள்விக் குறியாக்கி அதன் மடியில் துவண்டு போனவனை ஆறுதலாக ஓரிருவார்த்தைகள் சொல்லி உள்ளே அனுப்பினேன்.
ஒற்றை வார்த்தை….
உனக்கான கணக்கை முடித்துக் கொள்… இன்றிரவே முடிந்தால் கிளம்பு.
திரும்பி வந்தான், கல்பு உடைந்து கண்நிறைய முட்டிய நீர் திவலைகள், நெஞ்சுக்கூட்டுக்குள் ஒரு சமுத்திரம் சுனாமியின் ஓங்கி உயர்ந்த ஒரு அலை எழுப்பி ஆர்ப்பரித்து அவனை சுருட்டியது போல பேச எதுவுமின்றி தளர்ந்தவன் என் அருகில் சில நிமிடங்கள் தனது கையில் கொஞ்சம் டிஸ்யு பேப்பர் எடுத்துக் கொண்டு சென்று ஓரமாக சென்றழுதுவிட்டு திரும்பி வந்தான்.
இரண்டு சகோதரிகளை கரையேற்றவும் உடைந்து கிடக்கும் பழுதான வீடு போன்ற ஒரு மண் குவியலை சீரமைக்கவும் எனக்குச் சில கமிட்மெண்டுகள் என ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டு திரும்பவும் உடைய நின்றவனை…
இங்கே வருவதற்கு முன்னர் நீ யாசகம் செய்தா வாழ்ந்தாய். தளராதே, போ! நம்பு அல்லாஹ் உன்னை நிச்சயம் கை விட மாட்டான்.
நடந்து ஆறு ஆண்டுகள் முழுக்க கழிந்தபின் சில மாதங்களுக்கு முன் லுலு மாலில் சன நெருக்கடியில் ஹாய் அப்துல்லாஹ் எனும் பழக்கமான குரலில் திரும்பினேன் என்னை இழுத்து அணைக்கும் அவன்…
தன்வீர்!
அவன் எங்களின் சப்ப்ளையர் கம்பெனியில் எங்களின் கணக்குப் போல ஏழு எட்டுக் கம்பெனிகளின் கணக்காளர் தலைவராக மிக நல்ல பதவியில் இருக்கிறான். இதுவரை ரியாத்தில் பணி தற்போது கோபருக்கு ஒரு வேலையாக,
எனக்கு ஆமவடை ரெண்டும் ஒரு கட்லெட்டும் வாங்கி பார்சல் கட்ட சொல்லிட்டு நீ வடை பிரியமா சாப்பிடுவாய் இல்லையா? மறக்க முடியுமா? என்னிடம் கேட்டவன் கொஞ்சம் பூசினாற்போல அழகாக இருந்தான்….
அல்லாஹும்ம அந்த முஹ்சின். அவனுக்கும் ரப்பு தான் படியளக்கின்றான்.

 

Leave a comment