RSS

PILOT பேனா…

28 Jul

pen
அழகான நீலமும் பச்சையும் கலந்த தங்க கலர் மூடியுடனான பேனா ஒன்னு வச்சிருந்தேன்.. அதன் மேல் பைலட் ஜப்பான் என அச்சிட்டு இருந்தது. அதன் மதிப்பை நான் உணரு முன்னமே நீண்ட நாட்களுக்குப் பின் மலேசியாவிலிருந்து வரும்போது அன்புடன் அதனை எனக்கு வாங்கித் தந்து, எனது அன்புத் தந்தை வாப்பா! இது விலையுயர்ந்த பேனா இதனை பாதுகாத்து வைத்து எழுது! கை விரல்களில் மை கசியாது சட்டை பாக்கெட்டும் மையாகாமல் இருக்கும் கவனமா வச்சுக்கோன்னு தந்தார்கள்.
பள்ளிக்கு கொண்டு சென்றேன். ஒரு இரண்டு நாளாக அந்தப் பேனா ஆசிரியர்களால் வாங்கி ஆச்சரியமாக பார்க்கப்பட்டு சிலாகித்து பேசும்படியான பொருளானது. அந்த நேரத்தில் அது அபூர்வம். “அலே! பைலட் பேனா யாரோ ஒர்த்தன் இந்த வகுப்புல வச்சுருக்கானாம்லே அவன எங்க லே?” ன்னு நுழையும் சார்வாளுக்கு நான் பயந்தாலும் பின்னர் அவர் அருகில் வந்து அந்தப் பேனாவை வாங்கி பார்த்து நான் வச்சுக்கடட்டுமான்னு சும்மா கேப்பார்.
ஒரு நாலு நாள் கூத்துக்குப் பிறகு ஒரு நாள் பேனாவைப் புடுங்கி என் தாயார் வைத்துக்கொண்டு, நீ ஒன் பழய பேனாவக் கொண்டு போ, அதவச்சு படிச்சா போதும்ன்னு சொல்லிடுச்சு. திரும்பி தரவே இல்லை.
அழுது அழுது கேட்டுப் பார்த்த பின்னால கடேசியில் சொல்லுச்சு ” ஒரே கண் தி(ரு)ஷ்டி, பிச்சக்காரன் மாதிரி நாலு பேர் கண்ணுக்கு உறுத்தாம வாழ்ந்து நோய் நொடியில்லாம இருக்கணும் வாப்பா….
எப்பவும் உம்மாவுக்கு நான் நல்ல சட்டை போட்டா நல்ல அழகா தெரிஞ்சா கூட அன்னிக்கு கண்தி(ரு)ஷ்டிக் கழிக்க ஆலாப் பறக்கும்.
எவ்வளவு பாதுகாப்பும் பிராத்தனையும் மிக்க ஒரு வடிவம். அது ஒரு தாய்க் கோழியின் சிறகுக்குள் குஞ்சுகளை அணைத்துப் பாதுகாக்கும் ஒரு லாவகம்.

 

Leave a comment