RSS

அர்ப்பணிப்புடனான கற்பித்தல்

அர்பணிப்புடனான கற்பித்தல்.
—————————————————-
திருநெல்வேலி செல்லும் ஒன் டூ ஒன், முன்பு எங்கள் காலத்தில் 120 EX அதன் பிறகு பாயின்ட் டூ பாயின்ட், இடைநில்லாப் பேருந்து என முகங்களை மாற்றினாலும் இப்ப அந்த ஒன் டூ ஒன் எனும் வண்டிதான் ஓடுகிறது.
காத்திருந்தாலும் முன்பு போல வரும் வண்டியை கூட்டம் மொய்க்கையில் தாவி ஏறி இருக்கை இடம் பிடிக்க சிரமமான ஒன்றாக எனக்கு உள்ளதால், தட்டுத் தடுமாறி மூன்று பெண்கள் அடங்கிய எங்களின் இருக்கை தேவைக்கு என்னால் ஒரு முழு மூன்று இருக்கைகள் கொண்ட நீண்ட அமர்வு மட்டுமே பிடிக்க முடிந்தது.
அதில் பெண்களை அமர்த்திவிட்டு இருந்த ஒரு தூரத்து இருக்கையில் மகனை சின்னவனை அமர்த்தி விட்டு நான் நின்றுகொண்டு பயணிக்கத் தீர்மானித்தேன். என்ன ஒங்களுக்கு இடம் இல்லையா? ஐயையோ வேற எங்கயாவது கிடக்கும் பாருங்க! எனும் குடும்பத்தாரின் தூண்டுதலையும் தாண்டி எனக்கு மட்டும் உட்கார இடமின்றி நின்று கொண்டேன். என் மக்கள் என்னை மிக சிரமமாக பார்த்தனர். அவர்களின் இரக்கமான பார்வை எனக்கு ஒரு இடம் வேண்டியதாக இருந்தது. வெகு நாட்கள் வெளிநாட்டில் தங்களை பிரிந்து இருக்கும் வாப்பா தங்களின் அருகாமையில் சிரமமின்றி இருக்க அவர்கள் மிகுந்த சிரத்தை கொள்கின்றனர்.
நடத்துனர் வந்த நிலையில் நாம் வேறு வண்டியில் போயிக்கலாம் இறங்குவோம் என அவர்கள் சொல்லி அங்கே அவர்களை வேண்டாம் என சமாதானம் செய்த பின் வண்டி கிளம்பையில்,
சார் நீங்க இங்கே இருங்களேன் அப்படின்னு தன தந்தையை தன்னுடன் அழைத்து செல்லும் அவன் சட்டென எழுந்து கேட்டான், பரவாயில்லை இருங்கோ அப்படின்னு அவனது தந்தையின் அருகில் என்னை அமரவைக்க கட்டாயப் படுத்தும் அவனை மறுத்துக் கொண்டிருந்தேன்.
அங்கே எனக்கு இடம் தர கட்டாயப் படுத்தும் அவனை அவனது தந்தை பெயர் சொல்லி அழைத்து
டேய்! கண்டிப்புடன்… பேசாம கீழ இரப்பா ஏன் கிளம்பையில நீ இரி நான் இரின்னு கோணக் களி கிண்டுர?
அவன் நெளிந்தான் என்னிடம் பயின்றவன் என தெரியும் ஆனால அவன் யார் என்ன வகுப்பில் தன்னை என்னுடன் இணைந்துகொண்டான் என அறியாமல். அவனிடம் சொன்னேன் கொஞ்சம் நேரம் கழிந்தால் நான் சகஜமாகிவிடுவேன் நீ வாப்பா பக்கத்திலே இருந்து கவனித்துக் கொள் என சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
வண்டி நகர்ந்தது சுமார் பத்துப் பதினைந்து நிமிடங்கள் கடந்த நிலையில் வண்டி அரசு மருத்துவமனை அருகில் வரும்போது அவர், அதுதான் அந்த பையனின் வாப்பா அழைத்தார். நீங்க இங்க வாங்களேன் என அனைவரும் என்னை கவனிக்கும் படி அழைத்து என்னை அருகழைத்து நீங்க எங்க பெரியசர்த்து இன்னார் மகனா? நான் பேட்டைலங்கோ இவன் எம்மவன் உங்கட்ட படிச்சவன் தான். நீங்க என்னோட எடத்துல இருங்கோ என எழுந்தவர் பின்னர் தன மகனது இருக்கையை காட்டி எனது மறுப்புகளை எல்லாம் தள்ளிவிட்டு என்னை அவரருகில் அமரவைத்து விட்டுத் தான் மறுவேலை பார்த்தார். மகிழ்ச்சியுடன் பேசத் துவங்கியவர் சொன்னார் கடைசி வரைக்கும் என்னை எங்க கண்டாலும் உங்க வாப்பா எங்க அசர்த்து பேர் சொல்லிக் கூப்புடுவாக. எப்பேர்பட்ட ஆளு அவங்க.
அப்படி அவுக கூப்புடையில எனக்குப் பெருமையாக இருக்கும்.என்றார்
அவர் சொல்லும் போது, எனக்கும் பெருமையாக இருந்தது. கையில் ஒரு குடையை எடுத்துக் கொண்டு கால்நடையாய் அதிகாலை இருளில் செல்லும் அவர்கள் இஷா வுக்கு தான் வீடு திரும்புவார்கள். தேநீர் உணவு என அனைத்தும் அங்கேயே தங்கி மாணவர்களின் கற்பித்தலில் தான்னை கரைத்துக் கொண்ட அவர்கள், தன்னிடம் கற்ற மாணவர்களை இன்றும் அந்த அசர்த்தின் சந்ததிகளை கண்ணியம் செய்யுமாறு வாழ்ந்த அர்ப்பணிப்பு மிக்க சேவை எங்களை வாழும் காலமெல்லாம் செல்லுமிடமெல்லாம் அவர்களை நினைக்கவும் சிறக்கவே வைக்கிறது.
வாப்பாவுக்கு வடகரை முஹம்மது மீரான் செட்டில் ஹாபிலான மாணவர்களின் பெயர்கள் நினைவில் இருக்கும். அவர்களின் ஒன்று விட்ட பேரன் பேத்திகளின் பெயர்களை சில நேரம் மறந்து பின் எங்களிடம் தயக்கத்துடன் கேட்பார்கள்.

 

பண்டாரி மோதின்

பண்டாரி மோதீன்
——————————-
மாப்ளை ன்னு தொடரும் சத்தம் நம் பின்னால் தராவீஹ் முடிந்தபின் சலவாத்துகள் எல்லாம் சொல்லி ஓய்ந்து தொண்டை கட்டிய படி ஓடி வரும் மச்சான் கோசாமலெப்பை மோதினார் மசூது அவர்களுடையது.
சொல்லுங்க மச்சான் என்பேன்.
மாப்ள அப்போம் நம்ம கறிக்கஞ்சிய இந்த வாரம் வியாழக்கிழமை சாயங்காலம் போட்டா என்னா? நோன்புக்கஞ்சி காய்ச்சும் பண்டாரியும் அவர்தான்.
நம்மிடம் ஒரு முடிவான தேதியை குறிப்பிட்டு கேள்வியாக்கி செயல் பட செய்வார் மச்சான் ஸ்பெசல் அது தான்.
சரி மச்சான் எவ்ளோன்னு சொன்னா தந்துடறேன்…
அவ்வளவு தான் நம்ம வேலை… கணக்கு பில்லு மஞ்சி மச்சான் கடையில் சாமான் வாங்கிய லிஸ்டுடன் குண்டூசி குத்தி வந்த பின் காசு கைமாத்தப் படும்.
இன்னாங்கோ வரும் வழியில் மோதியார் என்னைக் கண்டு கஞ்சி விஷயம் கேட்டாகளே… தொலை பேசியில் வரும் மனைவியின் சம்பாஷணையில் மச்சானிடம் பில்லை வாங்கி அதற்கான தொகை ஒப்புவிக்கும்படி சொல்லி முடியும்.
மச்சானிடம் ஒப்புவிக்கும் அந்த வழக்கம் சென்ற ஆண்டுவரை நடந்து கொண்டிருந்த ஒன்று.
மச்சான் என் போன்ற முஹல்ல வாசிகளை அரவணைத்து முகம் மலர சிரித்து இணக்கமாக பேசி அங்கே பள்ளியின் சில சின்ன மராமத்துகளை நாசூக்காக முடித்துக் கொள்வார்.
இவ்வாண்டு நிச்சயம் ஒரு கறிக் கஞ்சிக்கு என் மகனையோ மனைவியையோ அணுக அவர் இந்த துனியாவிலேயே இல்லாமல் போனது வேதனை. இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…
பள்ளியில் பயான் செய்ய வரும் ஆட்களிடம் மறுக்காமல் பேச அனுமதித்து அங்கே அந்த பயானின் உருக்கமான கருத்துக்களைக் கேட்டுக் குலுங்கிக் கண்ணீர் வடிக்கும அவரது எளிதில் உணர்வு வயப்படுதலை நான் பலமுறைக் கண்டிருக்கிறேன். இளகிய மனதுடையவர்.
இறைவா ஒரு ஏழை மோதீன் ஒரு முஹல்லாவின் பள்ளிவாயிலுடன் எந்த அளவுக்கு அர்ப்பணிப்பாக பணி செய்ய முடியும் என்பதை கண் முன்னால் நிதர்சனமாக காட்டிய அவருக்கு மறுமையின் ஈடேற்றத்தை வழங்குவாயாக மஹ்ஷரில் வெற்றியாளராக்குவாயாக.

 

கஞ்சிக் காலம்

கஞ்சி
காத்துக்கிடந்த காலம்…
———————————–
பகலில் மூட்டத்துடன் எரிந்து கொண்டிருந்த அந்த அண்டாவில் காய்ச்சப்படும் பச்சரிசிக் கஞ்சி அதன் பூண்டு கலந்த மணம் மண்டி விரவிய தென்னங் கிடுவு வேய்ந்த கொட்டகையில் கொட்றா எனப்படும் மண் கலயங்களில் ஊற்றப்பட்டு நோன்பாளிகளுக்கு விளம்பிக் கொடுக்க தினமும் தயாராக இருக்கும்.
கொட்றாக்களின் எண்ணிக்கை மிக முக்கியம்… தினமும் பத்துப் பதினைந்து கொட்றாக்கள் உடைந்து கஞ்சிக் கொட்டகையில் சண்டையாகக் கிடக்கும் … அதனால் பண்டாரி மிகவும் கவனம் எடுப்பார். அவை தலைகீழாக கவிழ்த்தி வைக்கப்பட்டிருக்கும் வரிசையை கவனத்துடன் எண்ணி எடுத்து பயன்படுத்த சொல்வார்.
வரிசைகளில் ஒரே அளவிலான நம் தலையில் போடும் வட்டத்தொப்பி போன்ற வடிவிலான மண் கொட்றாக்களை பத்து பததாக பக்குவமாக கீழே விழுந்தால் உடைந்து விடும் ஆகையால் கவனமாக அள்ளி, தண்ணீர் நிரம்பிய பாசி அலையடிக்கும் கவுலில் கழுவிக் கொணர்ந்து அதில் உள்ஈரம் காயுமுன் பண்டாரி ஒருவாளியில் அள்ளிய கொதிக்கும் கஞ்சியை டோங்கா எனப்படும் மிகப்பெரிய தகட்டாலான அகப்பையால் ஊற்றி வருவார்.
கம்பிக் கேட்டுக்கு வெளியே காய்ந்த உதடுகளுடன் கஞ்சிக்கு வெறிகொண்டலையும் நாங்கள் ஆறரைக்கு நோன்பு திறக்க அஞ்சரைக்கே அந்தப் பள்ளியின் கீற்றடியில் காத்துக்கிடப்போம் கையில் மணீஸ் ஊறுகாய் பாளையுடன்.
———————————————————————————————————–
உவப்பானவர்கள்..
—————————-
கையில் நனைத்த ஒரு கைக்குட்டையால் தனது காய்ந்த உதடுகளைத் துடைத்துக் கொண்டும், அடிக்கடி ஊறும் எச்சிலை அங்காங்கே துப்பியவண்ணம், எச்சி முழுங்குனா நோன்பு முறிஞ்சிடும்ன்னு பயந்துகொண்டு
அசர் நேரத்தில் கிள்ளும் அடிவயிற்றுப் பசியை உதாசீனம் செய்தபடி, அவனது தள்ளாமை மயக்கத்துடன் வாடி வதங்கினாலும், ஆர்வக்கோளாரில் தொழுகைக்காக பள்ளி சேர்ந்து அனைவரையும் முந்தியவண்ணம் முதலாம் சஃப்புக்குள் நிற்கத்தாவும் அவனை,
எலே! பின்னால போங்கலே!… ன்னு சொல்லி அங்கே நிற்கும் பெரியவர்கள் துரத்தி அவர்களை இரண்டாம் முன்றாம் வரிசையில் நிப்பாட்டுவார்கள்…
பின்னிரவு நேரத்தில் விளையாடிக்கொண்டே கொஞ்சம் கையில் அள்ளி உண்டு பாதியும் உண்ணாமல் மீதியுமாய் போதும் போன்னு சொல்லிட்டு வாயைக் கழுவியவன், கையில் கொஞ்சம் தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு ஸஹரிலும் நண்பர்களுடன் அமர்ந்து, தானும் சஹரில் நோன்புக்காக எழுந்துவிட்டதை அவர்கள் மத்தியில் பதிந்து, நண்பர்கள் சூழ மொத்தமாக நவைத்து சவ்மக்கத்தின்… சொல்லி இறுதியாக அதா வாக நாளை இல்ல இல்ல இன்றே பிடிக்கன்னு திருத்தி சொல்லி நிய்யத்து வைத்து…. பின் காத்திருக்கிறான் ஒரு பத்துப் பனிரண்டு மணிகள் பசியும் தாகமுமாக அடுத்த வேளை உணவுக்கு… ஆனாலும் இடையில் அவனது நப்ஸின் தேவைகளுக்காக தாகம் பசி என அவனை விரட்டும் போது, ரப்பு தன்னைக் கண்காணிக்கிறான் என அனிச்சையாக உணர்ந்து வாயையும் வயிற்றையும் காயப்போட்டு பட்டினியாகவே வலம் வருகின்றனர்… நம் கண்மணியான மக்கள்…
அவ்விதம் அவன் வளைய வரும்போது அவனது வாட்டம் உணர்ந்து அல்லாஹ்! என பெருமூச்சுவிட்டு, அவனது சோர்வு கண்டு இரக்கம் கொண்டு துவளும் தனது பிள்ளையின் அந்த நோன்பை அவனது பசியைக் கண்டு மனதில் கசிந்துருகும் எந்தத்தாயும் அப்பிள்ளையை அந்தக் கணத்தில் உலகின் உன்னதமாக உவப்பாக கருதி அவனை நேசம் கொள்வது போல, எழுபது தாய்க்கும் மேலான ரட்சகன் எனும் அக்கருணையாளன் நம்மைக் கொண்டாட மாட்டானா….
இரக்கமுள்ளவன் தாய்மை உணர்வுடன் நமக்கு அள்ளித் தருவதில ஆனந்தம் கொள்பவன் எனும அந்த ரப்பு நமது வாட்டத்தை பசியை நம் இறையச்சத்தை நம்மில் காண்கையில் தன அளப்பெரும் கிருபையால் உவப்புடன் நோக்கி உன்னதப் படுத்த மாட்டானா?….

 

இன்னாசெய்தாரை… & கலாட்டாக் கல்யாணம்

தாளி
லிஸ்ட் போட்டு எழுதுகிறோம், அப்படியும் ஒரு கல்யாணம் மற்றும் வீட்டின் விசேசங்களுக்காக உறவுகளை அழைப்பதில் ஒன்றிரண்டு பேர் மறந்து விடுகிறது… இயல்பாக நடந்து விடும் இந்த நிகழ்வில் கடேசி வரை யாருமே நம்மிடம் அதனை நினைவு படுத்துவதும் இல்லை.
அப்படி ஒரு நண்பனை அழைக்க மறந்து விட அவனும் சில நாட்களுக்குப் பின் நீ என்னை மறந்து விட்டாய், உன் அழைப்புக்கு நான் தகுதியில்லை என நினைத்து விட்டாய் என்றான்…
அய்யய்யோ அப்படி நினைக்காதே.என்னை அல்லாஹ் மறக்காட்டிட்டாம்பா…
மன்னிச்சுக்கோ…
இல்லை இல்லை.. சும்மா சொன்னேன். அப்படின்னு அவரும் சொல்ல அத்துடன் அங்கே அது மறந்தே போச்சு.
சில நாட்களில் அவர் வீடு கட்டிப் பால் காய்ச்ச மிகப் பெரிய விசேசமாக அவர் கொண்டாட எண்ணினார். விடுப்பில் நானும் ஊரில் இருந்த காலகட்டம், எனக்கு மட்டும் அழைப்பு இல்லை.
ஆனால் முதல் நாள் மேல் ரோட்டில் வைத்து விசாரித்தார். எப்ப வந்தாய் எப்ப போவாய் என கேட்டவர் தான். முழுக்க தனது வீட்டின் பால்காய்ச்சப் போவதை குடிபோகும் நாளில் நான் பஜ்ரு தொழுகையில் கலந்துகொள்ளவேண்டும் என்பதை அவர் சொல்லவே இல்லை. ஆயினும் அந்த முன்னிரவில் மக்கள் சந்திக்கும் அந்த இடத்தில் என்னை வைத்துக் கொண்டே ஒன்றிரண்டு பேரை அவர் அழைத்தார்.
நான் முன்பு திட்டமிட்டு செய்து அவரைப் புறக்கணித்ததாக அவர் எண்ணியிருப்பார் போல…
பால்காய்ச்சிய அன்று அசர் தொழுகையில் பள்ளியில் அவராக தேடிவந்து சந்தித்த போது என்னிடம சொன்னார்.
எப்பா நீ ஏன் வரல?
நான் எம் மவன உங்க வீட்ட கூப்பிட சொல்லி அனுப்பினேன். வரலியா?
அடடா அவன் மறந்துட்டானோ?…
ஒரு வேளை அவர் கூப்பிட்டிருந்தால் கூட நான் அவரை அழைக்கமறந்து இன்னா செய்ததை மறந்து என்னை ஞாபகம் வைத்து அழைத்திருக்கிறார் எனும் ஒரு உறுத்தலில் அவரது வீட்டினுள் நன்னயத்தால் நாணியிருந்திருப்பேன்…
————————————————————————————————————-
கலாட்டாக் கல்யாணம்…
——————————————
திருமண வீடுகளில் அகலமான பூப்போட்ட சர்மன் தாலாக்கள் எனப்படும் அகன்ற கோப்பைகளில் உணவு பரிமாறுவார்கள். விரிக்கப்பட்ட சோற்றின் நடுவில் இரண்டு மூன்று இறைச்சித் துண்டுகள் கொஞ்சம் அதன் சால்னா….
அண்டா எனப்படும் இரும்பால் செய்யப்பட்ட அகன்ற அடிப்பாகமும் வாய்வளையம் குறுகியதுமான ஒரு பாத்திரம் சமையலில் பயன்பட்டது. மிகவும் கனமான ஒரு பாத்திரம் அது. நச்சுப் படாதிருக்க அதன் உள்பகுதியில் ஈயத்தால் பூசியிருப்பார்கள்..
சோத்து அண்டா, இறைச்சி அண்டா, சாம்பார் அண்டா என அவை திருமண நாளுக்கு முந்திய நாளில் வீட்டின் வாசலில் பந்தல் காலில் சாய்த்து ஒர்ப்பாக்கி வைத்திருக்கும்.
கைத்தறி வியாபாரியின் நூல் நனைக்கும் சாயமிடும் கம்பெனிகளில் நீர் நிரப்பி வைக்க துத்தநாக தகட்டால் அடிக்கப்பட்ட தொட்டி போன்ற பட்டியல்களும் இருக்கும். அந்தப் பட்டியல்களை அந்த தரகனார் வீட்டில் கேட்ட வண்ணம் எடுத்து தனது வீட்டின் உபயோகத்துக்கு பயன்படுத்துவதும வழக்கம்,
தாழி எனப்படும் இறைச்சியை சேமித்துவைக்கும் சாதனம், மண்ணால் ஆன ஒரே அளவிலான அந்தப் பானைகள் சிலர் வாங்கி திருமண வீடுகளுக்கு வாடகைக்கு விடுவார்கள். அவரின் முகவரி அறிந்து அந்த வீடு சென்று ஆளுக்கு இரண்டு மூன்று தாழிகளை சுமந்த வண்ணம் பெண்கள் ஒரு ஊர்வலமாய் பாடு பேசிக்கிட்டே, பந்தலை அடைந்து…
என்னா மேலவ்ட்டு மச்சான் ஒங்களத்தான….
நாங்கொ தாளிய எங்கன கவுத்தா?
கையில், இடுப்பில், தலையில் என தாழிகளை சுமந்த வண்ணம் வாசலில் நிற்கும் அந்தப் பெண்டிர் கேள்வியை பண்டாரி எனப்படும் சமையல்காரர் பக்கம் செலுத்த, அவரும் வந்து பார்வையிட்டு…
இந்த வூட்டுத் தெர்னை நல்ல அவலமா கெடக்கு… இங்கனேயே கவுத்துங்கம்மா என்பார்.
விருந்து நாளின் அதிகாலை மூன்று மணிக்கு பருப்பு வேகப்போட அடுப்பு பற்றவைக்கும் பண்டாரி காலை பத்துமணி வரைக்கும் சமையல் களத்தில் தனக்கான பரிவாரங்களுடன் பாசகம் செய்வார்..
ஆக்கிய சோற்றை பாத்திரம் மாற்றவேண்டும் இல்லாவிடில் கெட்டுவிடும் நெய்ச்சோறு அல்லவா…
மாற்ற அங்கே பொருத்தமான பாத்திரமாக அதுவரை நீர் நிரப்பி இருந்த அந்த தகட்டுப் பட்டியல் தேர்ந்தெடுக்கப் பட்டு வட்டாரம் மற்றும் உறவுகள் சோற்றை அள்ளி வரிசையாக நின்று அந்தப் பட்டியலில் தட்டி நிக்காஹ் எனும் திருமணம் முடிந்தபின் அதிலிருந்து கலத்தில் இட்டு விளம்பத் தருவார்கள்.
ஆக்கிவைத்திருக்கும் பதார்த்தங்களின் மணம் பந்தலில் அமர்ந்திருக்கும் அனைவரின் நாசிக்குள்ளும் ஏறிப் படர்ந்திருக்கும்… ஆட்டிறைச்சி மணமும் தாழ்ச்சாவும் அந்த நெய்ச்சோற்று மணத்துடன் விரவி மதிய சாப்பாட்டுக்கான கொதியை ஆவலை உண்டாக்கித் தூண்டும்..
இங்க யார்டே சமையல்?…
அடே அவரப்பா…சூப்பராருக்குமே…
பதில் கேட்டதும், மத்தியானம் வந்து ஒரு படி புடிக்கணும்ப்பா…
பேசிக்கொண்டிருக்கையில் அங்கே சத்தம்…
உடாத அவன…
நிக்காஹ் களரியில் கொஞ்சம் சலசலப்பு கேட்கவும்,
என்னடே அங்க என நிமிர்வதற்குள் நீம் போல வால வச்சுப் பாப்பமா? போட்டுப் பாப்பமா?
அங்கே மாப்பிள்ளை ஒரு பிரிவு இஸ்லாமியர்(!)களுடன் அந்த வீட்டினுள் பெண்ணைக் கட்ட நுழைய அங்கே மாப்பிள்ளையின் வரவுக்காக காத்திருந்த வேறு ஒரு பிரிவு இஸ்லாமானவர்(!)களும் குஸ்திக்காக காத்திருக்க,
அக்கீதா எனும் கொள்கையை நிலைநாட்ட அந்த மணவாளன் அன்றைக்கு பலியாடாக்கப்பட, உணர்ச்சிப் பிழம்பில் கொதிக்கும் கும்பலில்…
நீம் பேசாம இரிடே நாங்க பாத்துக்கிடுறோம்.மாப்பிள்ளையை அதட்டி ஒரு கட்டத்தில் கை நழுவ..
மிகவும் கடுமையான தள்ளு முள்ளு… அசிங்கமான வார்த்தைகள்… மனுசனே அங்கே நிக்க முடியாத நிலையில் மலக்குகள் நிப்பாங்களா?
ஹும்….
கல்யாணம் நடந்தேவிட்டது.
போங்கல போங்கல … சத்தம் குறைய கொஞ்ச நேரத்தில் திடீர் பரபரப்பு…
கொஞ்சம் பதட்டமான அந்த நொடியில் எல்லோரும் நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த இடத்துக்கு சென்று பார்த்தால…
உறவுகளும் வட்டாரத்துகாரங்களுமாய் நின்று அள்ளிப் போட்டு வாயில் துணி கொண்டு காற்றாட வேண்டி மூடிப் போட்ட அந்த பட்டியல் நிறைந்த சோற்றில் தெருவில் கிடந்த மண்ணை அள்ளி போட்டிருந்தனர்.

 

புதுப்பளியாசல் & போட்டோ எடுக்கவிடாத அண்ணன்

ஒரு இருபத்தைந்து வருடமாக வளைகுடாவில் வாழும் அவர், இடைப்பட்ட காலத்தில் இரண்டு இரண்டரை மாத விடுப்புகளில் ஏழெட்டு முறை ஊரை எட்டிப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் ஊருக்கு செல்லும் அவர், ஊரின் புறத்தோற்ற மாற்றங்களை காணும்போது வியந்து பின் புதிய மாற்றங்களுடன் பொருந்திப் போவார்.
ஒரு நாலு மாதம் முன்பு நம் ஊருக்குப் போனவர் வந்தபிறகு என்னிடம் விழி விரிய வியப்புடன் சொன்னார், அதே வார்த்தைகள்…
என்னங்கொ ஊரு மின்ன மாரியில்ல(முன்னர் மாதிரியில்லை) இப்போ ரெம்ப மாறியாச்சு…
அப்டி என்னத்தக் கண்டியோ? – நான் கேட்டேன்.
நம்ம புதுப்பள்ளியாச இப்பந்தான் புதுப்பள்ளியாசலா இருக்கு. சுத்தமா மாறிப் போச்சு.
ஹூம்…. ஒரு பெருமூச்சுடன்.
அந்த கூஜா வடிவ கிராதிகளுடன் நீலம் போட்டு வெள்ளையடித்த வாசலின் தடுப்பு சுவரில் மெலிந்த தூண்களால் சுற்றி சூழப்பட்ட அந்த பாரம்பரியமிக்க பள்ளிவாசலையும் நம்மளால மறக்க முடியுமா?
கோசலெப்பை மோதியாரும் உங்கோ நல்லாப்பாவும் செம கூட்டணி..
பழைய நினைவுகளில் மூழ்கிய அவரிடம் சொன்னேன்.
அதெல்லாம் நினைவுகளுடன் மட்டுமே இனி வாழும்.
அவர் சொன்னார்…
ஒரு நாள் மதியம் தறி நெசுக்கிட்டிருந்தப்போ பாஸ்போர்ட் வந்தவுடன் வாங்கி கவரப் பிரிச்சேன். சந்தோசம்..
எங்க வாப்பா சொன்னார். அடே ஓடிப் போயி பெரிய அசரத் கையில குடுத்து வாங்கிட்டு வா!
நானும் போனேன்.
என்னப்பா மஜீது?ன்னாங்க. ஒங்க நல்லாப்பாக்கு எம் மேல பிரியம்.
பாஸ்போட் வந்துருக்கு அசர்த்து, வாப்பா உங்கள்ட்ட சொல்ல சொன்னாகன்னு அவர்களிடம் தந்தேன்.. வாங்கி அப்ப நீயும் கிளம்புறியா?
சரி வாப்பா எங்க போனாலும் அல்லாஹ் உன் கூட இருப்பான்னு சொல்லி என் கையில் தந்தார்கள்.
அந்த மொத பாஸ்போட் அவ்வோ கையில் வாங்கித் தந்தது…
அதுக்குப் பிறகு ரினிவலில் மூணு பாஸ்போட் மாறிடுச்சு.
அது எங்க கெடக்கோ.
நான் இங்கேதான் கெடக்கேன்.
————————————————————————————————————-
போட்டோ புடிக்காதே…
————————————-

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA


அப்பவெல்லாம் காமிரா புகைப்படம் என்பதை ஹராம் என பத்வா கொடுத்துவிட்டார்கள் நீங்கள் போட்டோ பிடிக்கக் கூடாதுன்னு சொன்னதாக ஊரெங்கும் பேசிக் கொண்டார்கள். ஒரு சில வசதியான வீடுகளின் திருமணங்களில் புகைப்படம் எடுப்பதைக் கண்டிருக்கிறேன் அவ்விதம் எடுக்கப்பட்ட அந்த புகைப் படங்களுக்கு அந்த சபையில் அமர்ந்திருக்கும் பெரியாள்கள் தன தோள் துண்டை எடுத்து முகம் மறைத்தும், சிலர் வேண்டாப்பா அந்தப்பரம் போ ன்னு இறைத்து கோபமாக சொல்லியும் அந்த விசேச வீடுகளில் கொஞ்சம் கசமுசாவானதையும் நான் கண்டிருக்கிறேன்.
அப்போ எங்க தாத்தாமார் (அக்காமார்) இரண்டு பேருக்கு சேர்ந்த மாதிரி திருமணம் முடிக்க இருந்தது வாசலில் பந்தலும் வீடுகளில் திண்ணைகளில் தூக்கு விளக்குமாய் பரபரப்பான அந்த முன்னிரவு ஏழு எட்டுமணி… அன்று இரவுக் கல்யாண நேரத்துக்கான சில மணி நேரம் முன்பாக சட்டென ஒரு புகைப் படக்காரர் தனது கருவியுடன் எங்களின் வீட்டுக்கு வந்து புகைப் படம் எடுக்க வந்தார்.
இது பெண் வீடு மாப்பிள்ளை வீடு வேற தெருவில் உள்ளதுன்னு அங்கே சொன்னாலும் அவங்க தான் வர சொன்னாங்கன்னு அவர் தன கருவியின் மூடி திறந்து படம் பிடிக்க பிடிவாதமாக உள்ளேவந்தார்.
அங்கே அப்ப தான் மதரசாவில் பாடம் முடித்து பிரஷ் ஆலிமாக வந்த எங்கள் வட்டாரத்து அண்ணன் அங்கே வந்தார்..
நீங்க யாருங்கோ?
இங்க எப்டி வரலாம்? இது போட்டாப் பிடிக்கிறது எங்க மதத்துல ஹராம். மரியாதையா வெளியே போங்கோ…
அவரும் வந்தவரின் கையில் அழுத்தமான வெளித்தள்ளுதலில் பின்வாங்கி, ஓகே சார். என்றவராக இடம் விட்டார்.
இன்னமும் நல்ல ஞாபகம் உள்ளது.
அதே அண்ணன் ஒரு பத்து வருடத்துக்கு பிறகு திருமணம் செய்தார். சொற்ப ஆண்டுகளிலேயே ஹராம்கள் ஹலால்களாக மாற்றம் பெற்றதால் அவர் வெளிநாட்டிலிருந்து கையேடு வாங்கிவந்த காமிரா எனும் புகைப்பட கருவியால் நூற்றுக் கணக்கான படங்களை சுட்டுத் தள்ளிவிட்டார். சவுதிக்கு திரும்பப் போயி கழுவி அதை வரும் ஆட்களிடம் கொடுத்துவிடுவாராம்.

 

தட்டவெட்டி & கஞ்சியும் காராச்சேவும்

தென்றல் தேடும் தட்டவட்டிகள்.
———————————————–
கரங்கறேல் என கருப்பாக இருந்த குற்றால மலையின் அப்பாறைகள் மீது நீர் வழிந்த போது படிந்த பாசிகளை, வழுவழுப்பான அதன் கண்ணாடி போன்ற பளபளப்பான வழுக்கும் பரப்பை….
அதன் இயல்பான இந்த எழிலை உக்கிரமாக கொளுத்தும் கோடையின் அக்கினி நட்சத்திரப் பொழுதுகளால் நீர்ச்சுனைகளை இழப்பது மட்டுமின்றி அந்தப் பாறையும் தூசு படர்ந்து சாயம் வெளுத்த குடையின் சீலையாக கருப்பு நிறம் பழுப்பாக மாறி நிற்கும்.
அங்கே தாகித்துப் பறக்கும் காகம் கழுகு குருவி மைனா எனும் பறவைகளும் கூட தகிக்கும் சூட்டில் தங்களின் கால்களை வைக்கப் பயந்து தூரமாக்கி வெறுக்கின்றன கோடையில் குற்றாலத்தை….
ஊரெல்லாம் கொள்ளை வெயிலில் கொதித்தாலும் எங்கள் ஊருக்குள் எங்களைத் தாலாட்ட தென்றல் நுழையும் தெருக்களில்…
அரபிக் கடலின் ஆங்காரம் அலைகளாகி சுழல் காற்றின் வீச்சால் சுழி மாற்றி அடங்கிடாது சேரமான் பெருமாளின் கேரளக் கரை நோக்கி கண்பார்வை திரும்பிவிட, மலை முகட்டில் நிலைகொள்ளாமல் அலையும் சூல் கொண்ட மேகங்களின் அடிவயிற்றில் நீர் சுமந்த அருவிகளை ஒளித்து வைத்த, நில்லாமல் பெய்து ஒயாத ஒரு பெருமழைக் காலம் மலையாள மண்ணில் இருந்து கொட்டி மடி நனைய எம் பாண்டி மண்ணில் வடியத் துவங்கும்…
அந்த நீர்பட்டு தலை குளித்த தென்மலை தாண்டிய ஈரக்காற்றும் இனி தென்றல் என பெயர் சூட்டி எங்கள் தலைவாசல் வந்து கதவுதட்டும்…
மொட்டை மாடிகளின் தட்டவட்டியில் ஆடவரும் பெண்டிருமாய் நிறைந்து அங்கு நழுவும் ஈரக்காற்று வாங்கி, வாங்கிய காற்றைத் தழுவி நிற்பர்… மாலையில் வான் பார்த்து நன்றியுடன் கூட்டம் கூட்டமாய்….
கரை உடைத்துப் பாயும் மலைவெள்ளம் காய்ந்த அந்தக் கரும்பாறைகளின் கருப்பை பளபளப்புடன் மீட்டுக் கொடுக்கும் இந்த தென்றல் அழைத்து வரும் சாரல் நீர்மணிகள்,
சிலுசிலுவென பெய்யத் தொடங்கும் சாரல் மழையால் சந்தோசம் பூத்துக் குலுங்கும் இனி… கொண்டாட்டம் தான்..
————————————————————————————————————-
கஞ்சியும் காராச்சேவும்
————————————-
கையில் ஒரு காரச்சேவு பொட்டலம் மூக்கையா கடையில் வாங்கி வேவு வேவுன்னு வருவார் சாச்சா, பொட்டலம் இருபது பைசா விலை. இப்ப மாதிரியில்லாமல் அந்தக்காலத்தில் கொஞ்சம் அதிகமாக வைத்து மடித்து மூக்கையா லாலா கொடுப்பார்.
அந்தக் கடையின் வாசலில் ஏதாவது ஒரு பலகாரம் வாங்க செல்லும் சாக்கில் நின்று பலகாரங்களின் வாசனையை நுகர்வோம். அத்தனை கொதியோடு அலையும் நாங்கள் இன்று போல நினைத்த நேரமெல்லாம் லாலாக்கடை பலகாரங்கள் சாப்பிட முடியாது.
சாச்சசாவாங்கி வரும் காரச்சேவு பொட்டலத்தில் ஒரு ஏழெட்டு எண்ணத்தை ஒரு சர்மன் தட்டில் போட்டு, சாப்பிட உட்கார்வார்.
ஒரு பளாப்பெட்டி எனப்படும் ஓலைப் பெட்டியில் இருக்கும் பழுப்பு நிறத்தாலான அந்த மூடை வாசனை அடிக்கும் ரேசன் அரிசி சோற்றை விண்டு முழு உள்ளங்கைகளாலும் அள்ளி வெங்கலக் கும்பாவில் போட்டு, தண்ணீர் விட்டு நன்றாக நொறுங்குமாறு பிசைவார்.
அப்பொழுது தறிக்கு மேல் அந்த ஆலங்கா பலகையில் வைத்துள்ள வானொலியில் K S ராஜா வின் வேகமான உச்சரிப்பில் சிலோன் நிலையத்தின் பட்டாக்கத்தி பைரவன் திரைப்படத்தின் இலங்கை திரையரங்குகளுக்கான விளம்பரத்தை கேட்டவண்ணம் உண்ணத் தொடங்குவார் அப்பொழுது மதியம் மணி இரண்டு. கை நிறைய அள்ளி வாயிலிட தொடங்கி, இடையில் அந்த காரச்சேவை கடித்துக்கொண்டே ஒன்னரை கும்பா கஞ்சியும் அதன் தண்ணியும்குடித்து ஏப்…. என ஒரு ஏப்பத்துடன் முடித்துக் கொள்வார்.
மிச்சக் காரச்சேவு புள்ளைகளுக்கு ஆளுக்கு ரண்டு.

 

அவன் சாவட்டும்….

பனை
ஒரே பேச்சாக இருந்தது.. எங்களின் செட்டில் நாங்கள் பேசிக்கொண்டோம்..
நாங்க இன்னொரு வீட்டின் தோடத்து வழியாக சென்று பார்த்தபோது…
அவனது கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வேனல் காலமொன்றில் வெய்யில் காயும் பெறத் தோடத்தில் வத்தல் வடாம் காயப்போட்டது போல அவனை படுக்கப் போட்டிருந்தார்கள்..
தொட்டடுத்த தோடத்து வீட்டின் வாசலில் அவனது உம்மா நூல் ராட்டை சுற்றியபடிஇருதது.
அவன் அங்கே தோடத்து மண்ணில் வெயிலில் கிழிந்த ஒரு கைலியைக் கட்டியவனாக ஓங் என அழுது தரையில் உருண்டு கொண்டு கிடந்தான்…
அந்த உம்மா தன் மகனைப் பார்த்துக் கொண்டே சத்தமாக சொன்னார், “அல சாவுல அப்டி வெயில்ல ராத்திரி வரைக்கும் கெடந்து சாவுல”…
என்ன அநியாயத்த சொல்லா…. கொள்ளிமுடிவான் சுச்சிக்கட்டையில் வச்சிருந்த துட்ட எடுத்து சில்மா(சினிமா)க்கு சேக்காளிப் பேக்கள கூப்புட்டு பெய்ட்டானே…
இப்டி களவாண்டித் திங்கிற புத்தி இருந்தா ஊடு வெளங்குமா?நாளைக்கு அம்படையும் அடிச்சித் திங்கிற கொணம் வந்துருமே… நான் என்ன செய்யப் போறேன்?
மூணு நாலு மணிநேரம் அவன் அப்படி கைகால்கள் கட்டப்பட்டு வெயில் காயக் கிடந்தது பின்னர் எழுப்பி விடப்பட்டு கண்டிக்கப்பட்டதையும் கண்டு வாழ்ந்த அன்றைய கடையநல்லூர்…
குறிப்பு: கொள்ளிமுடிவான் (வாரிசின்றிப் போவான் என வழக்கில் இருந்த வசவு) சுச்சிக்கட்டை(ஸ்விச் போர்ட்)
————————————————————————————————————-
வலா(பராஅ)த்து ரொட்டி
ஒரு பெரிய மண் பானையின் கொஞ்சம் பகுதி அதன் வாய்வளையம் தாண்டி உடைக்கப்பட்டு சூடாக கதகதவென எரியும் விறகடுப்பில் ஏற்றப்பட்டு ஒரு வெண்கல குத்துச் சட்டியை புரட்டிப் போட்டு அதில் வெளுத்த துணி ஒன்றை போட்டு, நன்றாக மசித்த பிசைந்த அரிசி மாவை தன கையில் அள்ளி உள்ளங்கையில் எடுத்து அந்த குத்துச்சட்டியின் மேல் போட்டு தட்டி அதனை பரத்தி நல்ல மிகச்சரியான வட்டமாக்கி… அங்கே காயும் மண் பானை ஓட்டில் போட்டு வேக வைக்க துவங்கும் போதே யாரிடமும் அனுமதி கேட்காமலேயே உள்ளே நுழையும் அந்த அரிசி ரொட்டி சுடுகின்ற நறு மணம்…
எலவூட்டு ஆமினா சாச்சி ரொட்டி சுடும்போது எங்களின் பத்ரீன்களே நீங்க எங்க மக்களின் ஹக்கில் துஆ செய்யுங்கோன்னு சொல்லி தலையில் போட்ட முட்டாக்கை இன்னும் இழுத்து கண்ணில் நீர்த் திரையுடன் எங்களின் தலையிலும் தடவும்.
உம்மாவின் அந்த ரொட்டி தட்டுதலில் அமைந்து விடும் அந்த வட்டம், அளந்து வைத்து போல நறுவிசாக மிக சரியாக வாய்க்கும்…
மிகவும் ருசியாக இருக்கும் அந்த ரொட்டியை தனது உள்ளத்து வாஞ்சைஎல்லாம் மொத்தமாக்கி உப்புடன் சேர்த்துப் பிசைந்து தட்டி அந்த ரொட்டிகளை சுடத் தொடங்கும் உம்மா, இருப்பதில் நெளியாத ஒரு எவர் சில்வர் தட்டை எடுத்து கழுவி துடைத்து அதில் மூன்று ரொட்டிகள் வைத்து உள்வீட்டில் மடியில் யாசீன் கிதாபை எடுத்து வைத்து ஓத அமர்ந்த தாத்தா (சகோதரி) முன்னால் பய பக்தியுடன் வைத்து முடிந்த பின் எடுத்து தின்னவும் விளம்ப தரும்..
சூடான ரொட்டி எனும் அந்த அரிசி ரொட்டியில் மிஞ்சிய காய்ந்த பாகங்கள் மாலையில் சாயாக்கு முக்கி திங்க சுவையாக இருக்கும்.
அந்த ரொட்டியை அன்னிக்கு சுடுவதனால் வலாத்து ரொட்டி அப்படின்னு தான் சொல்றது.

 

மறைந்துவிட்ட மந்திரக்காரர்

சூனியம்
நீ பத்துக்குள்ள ஒரு நம்பரை நெனைச்சுக்கோ…
சரி… என்றபின் நாம் நினைத்த அந்த எண் என்ன என்று சொல்லி, மீண்டும் நீ ஒரு பூவ நினையேன் என்றார்…
ரோஸ்! சரிதானே என சரியாக சொல்லி கண்ணை வெட்டி நம்மை வசீகரிப்பார்…
அங்கே மெதுவாக தலையை நீட்டி அவரை தனியாகக் கூப்பிடும் அந்தப் பெரிய மனுசி, எவாப்பான்னு அவர் பெயரை சொல்லி தன் மருமகள் தன்னைக் கொடுமை செய்வதாகவும் எப்படியாவது அவர் சித்து வேலைகள் செய்து சரி செய்ய வேண்டும் என்று கேட்க அவரும்,
எ மாமி! நீங்க ஒரு நூறு ரூபா தாள கொண்டாங்கோ அந்தப் புள்ள என்ன தலையண மந்திரம் வச்சாலும் நான் ஒடச்சு ஓம் மவன ஒங்க பக்கம் திருப்புறேன்னு சொல்லி கறந்து,
அவரிடம் உங்க காலுக்கு கீழ குனிஞ்சு கொஞ்சம் மண்ணள்ளித் தாங்கோன்னு கேட்டு ஒரு தாளில் அதை மடக்கி தன அருகில் தன சொல் கேட்கும் சக நண்பனிடம் தந்து நாளைக்கு எல்லாம் முடிச்சிடுவேன்னு சொல்வார்…
இந்த யாவாரத்தை அவர் ஊருக்கு வந்து இருக்கும் அந்த சில நாட்கள் செய்து தன் செலவுக்கு சம்பாதித்து விட்டு புறப்பட்டு விடுவார். கோயம்புத்தூரில் அவருக்கு ஒரு கடை ஒன்றை போட்டு இந்த மேற்படி வேலைகளை செய்து அதில் கொஞ்சம் சம்பாதித்து வருவதாகாக் கூட இடையில் ஊரில்பேசிக் கொண்டனர்.
பரபரப்பான அந்த ஓர் நாள் அவரது சடலம் நாதியில்லாமல் சேலம் மருத்துவமனையில் இருப்பதாக அதனை ஊருக்கு கொண்டு வருவதாக தகவல் வர நானும் ஊரிலுள்ள பிறரைப் போல அவரது உடலில் வருகைக்காக காத்திருந்தேன்…
வந்தது… வண்டி டிக்கியில்ஓலைப்பாய் சுற்றிக்கட்டி.
இரவின் நிசப்தத்தைத் தகர்த்து ஆணும் பெண்ணும் திரண்டிருந்த, அவர் பிறந்த அந்த வீட்டின் வாசலில், வந்து நின்ற வண்டியில் அவருடன் அமர்ந்து பயணித்தவர், நினைத்தாராம் இந்த உடலை ஊருக்குள் ஏற்றுக் கொள்வார்களோ மாட்டார்களோ… வண்டியின் இந்த நீண்ட தொலைவு வாடகையை தருவார்களோ மாட்டார்களோ… வண்டியில் வரும் உடலுடன் சில காலம் வாழ்ந்த அதன் உடமைக் காரிக்கும் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைக்கும் உண்ண உணவில்லாத காய்ந்த கும்பிக்கு எதேனும் கிட்டுமோ கிட்டாதோ….
உடலை குளிப்பாட்ட எடுத்து சென்ற அந்த கூட்டத்தில் முண்டி நானும் சென்று கண்டேன்…
உடல் இறக்கும் போது அழுது கொண்டே பாலகர்கள் இறங்குவதை அப்பா அப்பா…..
அடிவயிறு பிசைந்தது…
பொத்திய கைக்குள் இருப்பதை சொல்லிக் காட்டி பூத்தையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தஅவர் ஒரு பூவை நம்பரை நெனச்சுக்கோ என்றும் கசக்கிய காகிதத்தில் எழுதப்பட்ட வாக்கியத்தை கண்டு பிடித்தபின் ஒரு நாள் இரவில் நிர்மலமான வானில் நிலா பார்க்க நடு வீட்டின் முற்றத்தில் கோரி ஊற்றிய நீரில் நனைந்த உடலத்துடன் ஒடுங்கிய கோழி போல…
படச்ச ரப்புக்குப் போட்டியாக ஆருடம் சொல்லிக் கழித்த அவர் நிமிர்த்திய நெஞ்சுக் கூடு ஒடுங்கி கண்களில் இருப்பிடம் இரு குழிகள் விழுந்து நீண்ட நாளின் நோயாளிக் கோலத்தில்…
அவர் வாழ்ந்து மறைந்தாலும் அவர் நம்பர் முழு பூஜ்ஜியம் தான்.. சூனியம் தான்.

 

மிஸ்ரு தேசத்து இளவரசன்

ஆசை ஆசையாக என் மடியில் வந்து படுப்பான் என் மகன். எப்பொழுதும் அவனுக்கு நான் மிகவும் சொந்தமானவன் எனும் உணர்வை அனைவர் முன்னும் நிலைநாட்ட பிரியப்படுவான்… அவன் தலை முடியை கோதி விடும் போது கேட்பான் வாப்பா நீங்க ஒரு ஹதீஸ் சொல்லுங்க! போன முறை அப்படி அவன் கேட்க, அது கொஞ்சம் சிரமமான நேரம்,அப்பொழுது தான் திருநெல்வேலியில் இருந்து நாங்கள் வீட்டுக்கு வந்து கொஞ்சம் வயிற்றை நிரப்பி எப்படா கண்ணைப் பொத்தலாம் என ஏங்கிய நேரம்…
நான் அவனது ஆசையை மறுக்கவில்லை…
ஹஜ்ரத் பிலால் அவர்களை எத்தியோப்பியாவில் இருந்து அரபுலகிற்கு அடிமையாய் கொணர்ந்து அவருக்கு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமையை சொல்ல… கேட்டபடியே உணர்ச்சி வசப்பட்டவன்… கொஞ்சம் நேரத்தில் என்னருகில் வந்து படுத்துக் கொண்டான். என் அண்மையில் நெருங்கி என் நெஞ்சுக்குள் தன முகம் வைத்து நெருக்கிய சில வினாடிகளில் நான் கொஞ்சம் ஈரம் உணர்ந்தேன் அத்துடன் நிறுத்திவிட்டேன்.
அவன் அழுதான்..
மறு நாள் அதன் மீதியை நான் சொல்வேன் என எதிர்பார்த்திருப்பான். அவனாக கேட்க கொஞ்சம் வெட்கம்… பெரிய பையன் கண்ணீர் விட்டு வாப்பா முன் அழுதுவிட்டோம் என எண்ணியிருக்கலாம்… கொஞ்சம் கடினமான தருணமாக உணர்ந்திருக்கிறான்.
நானும் அதனை தொடராமல் வேறு ஒன்றை சொல்ல ஆரம்பித்தேன்..
முன்பு யூசுப் நபியின் கிஸ்ஸாவை வாப்பா என்னை தன அருகில் வைத்துக் கொண்டு சொன்ன அந்த விவரிப்பில் பதினாலாம் பக்கத்து நிலவை ஒத்த அழகுள்ள அந்த இறைத்தூதரை பாலகரை அந்த யூசுபை கிணற்றில் இறக்கிய நிகழ்வில் நான் ஓ என அழுத போது என்னுடன் அமர்ந்து கதைகேட்ட கடைக்கும்மா எனும் எங்களின் நல்லம்மா அழுகையை ஆற்றியபடி சொன்னார்கள்…
வாப்பா அழுவாத அந்த மகராசன் யூசுப் பிழைத்துவந்து அந்த ராஜ்ஜியத்தையே ஆண்டார் வாப்பா… ஆறுதலாக தலைய தடவி என் கண்ணீரை தன முந்தானை சீலையால் துடைத்தார்கள்..
அதன் தொடர்ச்சியை வாப்பா சொல்லும் முன்பாக கப்பலேறி மலேயா சென்ற பின் இரண்டாண்டுகள் காத்துக் கிடந்தேன்…
முற்றுப்பெறாத கதைகளின் அந்தக் கண்ணீர் காய்ந்தாலும் கல்புகளுக்குள் ஈரமாய் பிசுபிசுப்புடன் எப்பொழுதும்…

 

பேய் வந்திடுச்சு..

பேய் வந்தவங்கள பார்த்திருக்கியளா?
நம்மூர்ல இந்த கேள்விய என் போன்ற வயதொத்த ஆட்களிடம் கேட்டால் அவர்கள் ஆம் ன்னு சொல்வாங்க…
அது ஜாலியா இருக்கும், அந்த திருமண வீட்டின் கூட்டத்தில் எல்லோரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் போது வாசலில் பந்தலில் நின்று கொண்டிருக்கும் அவரை, சின்னாப்பா உள்ள வாங்கொ!ன்னு ஒரு பொம்பள வந்து கூப்புடவும்,
அவர் என்னத்துக்கு இப்போம் என்ன அங்க உள்ள கூப்புடுற? அப்படின்னு கேப்பார்,
இய்யோ இங்கேருங்கோ சின்னாப்பா பையக்கேளுங்கோ… எங்க கீழவுட்டு மாமி மேல ஒங்க ம்மா பேயா வந்து ஒங்கள கூப்புடுறா… நீங்க உள்ளவந்துட்டுப் போங்கோ ன்னு சொன்ன ஒடனே அவர் ஆடிப் போவார் எமா ன்னு கிளம்பிப்போகும் அவருக்குப் பின்னால் நாங்களும் கெளம்பி அங்க போவோம்…
அங்க பாத்தா அந்த பேய் வந்த பெத்தம்மா அவரை பேர் சொல்லிக் கூப்பிட்டு இன்னார் இன்னாரை எல்லாம் நீ கலியாணத்துக்கு நல்(ல்ல்)லா கூப்பிடாம மேட்டாக்குல (லேசா) கூப்பிட்டுடியப்பா ன்னு ஒரு போடு போடும்..
இவரு எமா நான் வேணும்னா இன்னோருக்கா கூப்புடுறேன்னு எம்புள்ள போற இடத்துல நல்லாருக்கனுமின்னு துவா செய்யின்னு சொல்லிட்டு எமா எந்தாயி ன்னு அழுவார்…
எல்லோரையும் கலைய சொல்லிட்டு நல்லா விசிறி எடுத்து வியர்த்து நிற்கும் அந்த வயசான பெத்தமாக்கு வீசி அவர்களும் தன நிலைக்கு வந்துட்ட பிறகுகேப்பாக…. என்னமா எனக்கு என்ன ஆச்சு ஒன்னும் தெரியல திடீருன்னு படபடன்னு வந்துதுன்னு சொல்லிட்டு ஆளோட பேரோட உக்காந்து கதபெசிக்கிட்டு வெத்தில போட்டு துப்பும்…
அந்தக் கல்யாண வீடு முழுக்க அங்கே அவரது உம்மா பேயாக வந்து பேத்தி கல்யாணத்தில் கலந்து கொண்ட செய்தி தீயா பரவி நிக்கும்.
என்ன இருந்தாலும் தன மடியில் போட்டு ஆசையா வளத்த புள்ள இல்லியா அது தான் கெழவி மனசுகேக்காம பந்தலுக்குள்ள வந்துட்டா…