எத்தனை ஆண்டுகள் நிறைவுற்றாலும் எத்தரையில் நாம் பணி செய்தாலும் நித்திரையில் கூட மறக்கவொண்ணா நினைத்திடச் சுவைதரும் நினைவுகள் நம் பிறந்த நிலத்தின் பால்ய காலம் தொட்ட வாழ்க்கையில் தான்….
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் உள்ளத்துக் கிடக்கைகள், அவனது உறவு சார்ந்த சிந்தனைகள், அவனது தாய் மண்ணில் சொந்த ஊர் சார்ந்தே அமைகின்றன..
தன் தாயை தன் அன்புக்குரிய உறவுகளை அவன் இதயம் நெகிழ நேசித்து மகிழ்வது போல தனது சொந்த ஊரையும் அவன் நேசிக்கிறான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
அவ்விதம் அமைந்து இன்று வரை என் நெஞ்சோடு நினைவுகளை விரித்துப்பரத்தி வைத்து நேசத்தை விதைத்து, பாச உறவுகளுடன் பண்புடன் பழகி நான் களித்த என் பிறந்த ஊரான கடையநல்லூர் எனும் அழகிய நகரம் எனக்கு உலகின் மற்றெல்லா நகரங்களைக் காட்டிலும் அதன் இயற்கை அழகில் இன்பம் தரும் பண்பாடு மற்றும் கலாச்சார சுற்றுப்புற சூழலில் மிகைத்தே நிற்கின்றது.
இங்கு வாழும் என் இஸ்லாமிய உறவுகளின் வாழ்க்கை சூழல், நம் உறவுகளின் கடல் தாண்டிய கைப்பொருள் தேடும் சித்தாந்தத்தின் படி தன் தகப்பனை, சகோதரனை, கணவனை, மகனை என தன் உறவுகளின் அங்கங்களை அன்கிங்கெனாதபடிக்கு எங்கெங்கேயோ அனுப்பி வைத்து அவர்தம் ஈட்டும் நிதி கொண்டு அன்பொழுக வாழும் அழகான அமைப்பு.
நமக்கான உறவுகளின் நீட்சி நம்மையொத்த பிற ஊர்க்கார உறவுகளைப் போல் ஊரைத்தாண்டி அமையாமல், நமது சொந்த பந்தங்கள் மற்றும் சம்பந்தங்கள் திருமண வடிவிலான பந்தங்கள் அனைத்தும் பெரும்பாலும் ஏற்கெனவே நம்முடன் உறவுற்றிருக்கும் அல்லது கொஞ்சம் தூரத்து உறவிலான குடும்பங்களுடன் நம் ஊருக்குள்ளேயே மட்டுமே அமைத்து வாழ்ந்து வருகிறோம்…
காலங்கள் கடந்து, நாம் நமது வசிக்கும் எல்லையை மிக அதிக அளவில் விரித்து நான்கு திசைகளிலும் வயல வெளிகள் தோப்புகள் என நமக்கு அருகில் உள்ள அனைத்து பூமிகளையும் வீடுகளாக்கிய பின்னர், இன்றும் நாம் எல்லைக்கல்களை நட்டு நமது மண் மனைகளைப் பெருக்க அரும்பாடு பட்டு வருகிறோம்.
மொத்தத்தில் மக்கள்தொகை பெருகி இன்றைய கடையநல்லூர் மிகப்பெரிய ஊராக புதிய தோற்றத்தில் எண்ணற்ற பொறியாளர்களையும் மருத்துவர்களையும் பட்டதாரிகளையும் ஏனைய கல்வியாளர்களையும் ஆண்களிலும் பெண்களிலும் பெற்று மார்க்கக் கல்வி கற்ற ஆலிம் ஆலிமாக்களையும் சேர்த்து கல்வியறிவு செம்மையாய் பெற்ற கடையநல்லூராக நாம் பெருமைப்பட முடிகிறது.
இயற்கையிலான தத்துவ அடிப்படையில் மேடுகள் என இருப்பின் அங்கு பள்ளம் என்பது தவிர்க்க முடியாதது போல பேரும் பெருமையும் மிக்க நமது மண்ணில் சில ஒழுக்கநெறி தவறிய நிலைப்பாடுகள்… அவை நாமெல்லாம் உயிராய் மதிக்கும் நமது மார்க்கத்துக்கும் சமூக சூழலுக்கும் இழுக்கு வரும்படியான நிகழ்வுகள் சமீப காலத்தில் அடிக்கடி நிகழ்வதும், பின்னர் அது மறக்கப்படுவதுமாய் கழிகிறது..
இங்கே முக்கியமாக நாம் கருத்தில் கொள்ளவேண்டிய செய்தி இன்றைய கூட்டமைப்பில் நமது மக்களின் அனைத்து செயல்பாடுகளும் ஒரு கண்காணிப்பில் இல்லை.
குடும்ப உறுப்பினர்களின் ஒளி ஒலி ஊடகங்களுடன் மற்றும் இணையங்கள் அலைபேசி தொடர்புகள் அனைத்தும் அல்லாஹ் ரசூலின் விருப்பத்திற்கிணங்க அமைந்திடவில்லை.
நம் பெண் மக்களைப் பற்றிய செய்திகள், வதந்திகள், அவதூறுகள் மிக எளிதாக பரவி அதனை பொழுதுபோக்குக்காக பேசி சம்பந்தப்பட்டவர்களை காயப்படுத்தும் போக்கு நீங்கவில்லை.
அவசியம் இன்றி அடிக்கடி காவல் நிலையங்கள் வழியாக நம் சொந்தப் பிரச்னைகள் அணுகப்படுவதும் அவை செய்திகளாக ஊடகங்களில் இணையம் வழி பகிர்ந்து மனம் வேதனைப்பட வைப்பதும் தொடர்கிறது…
நம் எண்ணங்களில் எத்தனையோ வேதனைகள் இருந்தாலும் இனி எப்படி யார் எந்தவகையில் இவற்றை சீர் செய்வது என்பதை தெரியாமல் திசை அறியாது கை பிசைந்து நிற்கும் நிலையில் நாம் பலவாறு சிந்திக்க வேண்டியுள்ளது….
இது வரை நமது ஊரில் ஊர்க்கட்டுப்பாடு (?) என்ற ஒன்றுக்கு நாம் கூட்டும் அனைத்து வட்டார வழியிலான பெரியவர்கள் இனி ஒதுங்கி ஆலிம்கள் உலமாக்கள் கையில் ஊரின் பிரச்சினைகள் அலசப்பட்டு அவ்விதம் அவர்கள் பள்ளிவாசலில் வைத்து எடுக்கும் முடிவுகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட செய்தாலோ.
ஒரு சமுதாயத்தின் ஆணிவேராக உள்ள குடும்பப் பெண்கள் மார்க்க அறிவு பெறும்படியாக நிறைய மார்க்க விளக்க கூட்டங்கள் வாராவாரம் அந்தந்த வட்டாரங்களில் நம் ஊரில் உள்ள மகளிர் மதரஸாக்களின் ஆலிமாக்களை கொண்டு நடத்தப்பட்டாலோ.
வெகு நாட்களாக தொலைந்திருந்த பார்ட்டி கலாச்சாரம் தண்ணியடித்து கூத்தடிக்கும் போக்கு இப்போது மீண்டும் ஒன்றிரண்டு ஆண்டுகளாக தலைஎடுத்துவிட்டதை காணும்போது வேதனை அளிக்கும் அதே நேரத்தில் சங்கங்களில் சேர்ந்து இளம் பெண்களை கேலி செய்யும் இளைஞர்களை கண்டு அம்மாதிரியான சங்கங்களை பெண்டு பிள்ளையர் நடமாடும் பரபரப்பான இடங்களில் இருந்து அப்புறப் படுத்த முயற்சித்தாலோ…
நமது இஸ்லாமியப் பெண்டிர் பிற மதத்தை சேர்ந்தவர்களை தனது நட்பாகக் கொண்டு அவர்களை தனது வாழ்க்கைத் துணையாகக் கொள்ளும் அளவுக்கு போய்விட்ட நிலையை நாம் எண்ணி,இஸ்லாமிய வாழ்க்கை நெறியின் கண்ணியத்தை அவர்கள் உணரும் வண்ணம் குறைந்தது எட்டாம் வகுப்புக்கு மேலே பயிலும் மாணவர்களின் வகுப்புகளில் மார்க்கக் கல்வி கற்ற ஆலிம் ஒருவரால் பள்ளிக்கூடங்களில் தீனியாத் போதிக்கும் பாடவேளை தேர்வுகள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டாலோ…..
என எண்ணங்கள் மனதோடு கிடந்தது மாய்மாலம் செய்யும் அதே வேளையில் …
எத்தனையோ மைல்களுக்கப்பால் தன் சகோதரியை தாயை, மனைவியை, பெற்ற மக்களை விட்டுவிட்டு அவர்கள்மீதான நம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் உள்ளங்கைகளில் வைத்து உள்ளம் நடுங்க உயிர்வாழும் எண்ணற்ற தேசாந்திரிகளுக்கு அவர்தம் குடும்பம் ஆரோக்கியமான சூழலில் தான் உங்களுடன் பயணிக்கிறது என்பதை ஊர்வாசிகள் எப்பொழுது எப்படி உணர்த்தப் போகிறோம்..
ஆற்றாத துயரத்துடன் அல்லாடும் இழிந்து கிழிந்து போன நம் ஊரின் மானச் சட்டையை எப்படி யாரைகொண்டு தைக்கப்போகிறோம்.
ஒவ்வொரு குடும்பத்தலைவனுக்கும் அவனது மனைவி, மக்கள் மீதான பொறுப்பு உள்ள போது அதனை நாம் எளிதில் எங்கனம் உதாசீனம் செய்ய முடிகிறது..
நாளைய மஹஷரில் இதற்காக நம்மிடம் என்ன விடை உள்ளது.
நம் கண் முன்னேயே அரங்கேறும் இந்த அவலங்கள் அசிங்கமான தருணங்கள் நிற்பது எப்போது…
இணையங்களில் செய்திகளில் கடையநல்லூர் எனக் குறிப்பிட்டு விமர்சனங்கள் செய்யப்படும் போக்கு என்று நிற்கும்….
சிவப்பு நிற அறிவீனக் கழுகுகளின் அசிங்கமான விமர்சனங்களில் இருந்து நம் ஆலிம் பெருமக்கள் ஊர் பெரியவர்கள் மற்றும் நம் அமைதியான அன்புற்ற இஸ்லாமிய வாழ்க்கையைக் காப்பாற்றி அதனை நாம் வென்றெடுப்பது எப்படி…
எளிதாக தீர்வு செய்யப்பட ஒரு சம்பவத்தை மாநில ரீதியாக பெரிதாக்கி நம் ஊரின் மீதும் நமது கட்டுக்கோப்பான வாழ்க்கையின் மீதும் அதன் கண்ணியத்தை இழிவு படுத்தும் விதமாக கட்டுரை எழுதும் அந்த கம்யூனிஸ ஏடுகள் நம்மைப் புரிந்து நமது பக்க நியாயங்களை வேண்டுமென்றே ம(றை)றுக்கும் அவர்களைப் போன்ற நம்மிடையே வாழும் செங்கொடி ஏந்தும் நரிகளை இனம்கண்டு எவ்விதம் அவர்களை கையாளப் போகிறோம்…
செங்கொடிக்கு…
விவாதம் செய்கிறேன் பேர்வழி என முகத்தைக் காட்டாது விதண்டாவாதம் செய்து அமைதியான ஊரின் மீது அசிங்கமான சேற்றை வாரி இறைக்க ஆசைப்பட்டு ஆப்பசைத்த குரங்காக உங்கள் செங்கொடி இணைய தளத்துக்கு திண்டுக்கல் பூட்டு ஒன்றைப் போட்டுப் பூட்டி சாவியை தொலைத்து இன்று வேறுவேறு பெயர்களில் கடையநல்லூர் வாசிகளின் கல்பை உடைத்துக் களமாட எண்ணும் நீங்கள் தலைமறைவு யுத்தம் செய்யாமல் உங்களின் பெயர் கூறி உ(எ)ங்களின் ஊரில் சேட்டையை இனி தொடர முடியுமா எனப் பாருங்கள்….
கடையநல்லூர் என்பது ஊர்ப்பெயர் தான் அஃறிணை தான்….ஆயினும் ரத்தமும் சதையுமாக உறவுக்கூட்டம் உயிருக்குயிரான இஸ்லாத்தின் பெயரில் ஒன்றுடன் ஒன்றாய் பின்னி ஓர் அணியில் உள்ளே உயிரோடு தான் வாழ்கிறோம்…
எங்களின் உயிருக்குயிரான உறவுகளை நேசிப்பது போல எங்களின் பிறந்த மண்ணையும் நாங்கள் நேசிக்கிறோம்…. தூற்றுவதை நிறுத்துங்கள்…














